search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
    X

    தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

    • மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.
    • மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    அதன்படி பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 21 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு 2,358 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து வினாடிக்கு 2,547 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு 1,728 கனஅடி நீர் வரும் நிலையில் வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதுதவிர கடனா அணையில் இருந்து 303 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் மொத்தமாக இன்று காலை நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் ஓடியது. மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.


    தற்போது தைப்பூச திருவிழாவிற்காக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் பாதயாத்திரை வரும்போது ஆற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர். தற்போது ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரித்து காணப்படுவதால் அங்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் இன்று காலை முதல் குளிக்க வந்தவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து திரும்பி அனுப்பி வைத்தனர்.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாலுமுக்கில் அதிகபட்சமாக 8.2 சென்டிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 7.7 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 37 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, அம்பை, ராதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.

    குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பை, கன்னடியன் கால்வாய் பகுதியில் தலா 14 மில்லிமீட்டரும், சேரன்மகா தேவி, மூலக்கரைப்பட்டியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடனா அணை பகுதியில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராமநதி, கருப்பாநதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவியில் அதிக அளவு தண்ணீர் விழுவதால் அங்கு இன்றும் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 26 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஏற்கனவே பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் ஒரு சில இடங்களில் வடியாமல் இருக்கும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வைப்பாறு, சூரன்குடி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. சாத்தான்குளம், கோவில்பட்டி, கழுகுமழை, கடம்பூர், கயத்தாறு ஆகிய இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×