search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருணாநிதி நூற்றாண்டு முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி பயணம் தொடங்கியது: 4 அமைச்சர்கள் பங்கேற்பு
    X

    கருணாநிதி நூற்றாண்டு முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி பயணம் தொடங்கியது: 4 அமைச்சர்கள் பங்கேற்பு

    • கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
    • எழுத்தாளர்-கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பைத் தரவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து உத்தரவிட்டார். அதில், "எழுத்தாளர்-கலைஞர்" குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில், கருணாநிதியின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவரது பன்முகத் தன்மையினை எடுத்து சொல்லும் வகையில், எழுத்தாளர்-கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி தயார் செய்யபட்டு உள்ளது.

    இந்த முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த முத்தமிழ் தேர்அலங்கார ஊர்தி பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள முக்கோணப்பூங்கா அருகில் இன்று காலை நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முரசு கொட்டி அலங்கார ஊர்தி பயணத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் முத்தமிழ் தேர் உள்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதனை சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்த்து ரசித்தனர்.

    "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சீரோ பாய்ண்ட், பழத்தோட்டம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வழியாக அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி சென்னை சென்றடைகிறது.

    தொடக்க விழாவில் விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூகத்துறை ஆணையர் அமுதவல்லி நன்றி கூறினார்.

    Next Story
    ×