என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
குவைத் தீவிபத்து- 3 தமிழர்கள் உயிரிழப்பு
- அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- அதிகாலை நேரம் என்பதால் பலரும் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்கள் தூக்கத்திலேயே உடல் கருகினர்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், ஏராளமான புலம்பெயர் மக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு என்பதால், அங்குள்ள எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு மையங்கள் என அது சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் குவைத்தில் வசிக்கின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். பிற வளைகுடா நாடுகளைப்போல குவைத்திலும் இந்தியர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள்.
குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதத்தினர், அதாவது சுமார் 10 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். மேலும் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திலும் 30 சதவீதம் பேர் (சுமார் 9 லட்சம்) இந்தியாவை சேர்ந்தவர்கள்.
குவைத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர் குடும்பமாக தங்கியிருக்கின்றனர். அதேநேரம் குடும்பத்தினரை இங்கே விட்டுவிட்டு தனியாக வசிப்பவர்களும் அதிகமாக உள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் குடியிருப்புகளில் தங்கியுள்ளனர்.
அந்தவகையில் குவைத்தில் இயங்கி வரும் பிரபலமான என்.பி.டி.சி. என்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
6 மாடிகளை கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200 பேர் தங்கியிருந்தனர். தொழிலாளர் முகாம் என அழைக்கப்படும் அந்த பகுதியில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு போன்ற தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென பரவிய இந்த தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும், மாடிகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதிகாலை நேரம் என்பதால் பலரும் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்கள் தூக்கத்திலேயே உடல் கருகினர். அதேநேரம் புகை மூட்டம் காரணமாக பலருக்கும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.
இவ்வாறு உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பல தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் உடல் கருகியதை விட, மூச்சுத்திணறி இறந்தவர்களே அதிகம் ஆகும்.
அதேநேரம் தீ விபத்து ஏற்பட்டதும் தப்பிக்க வழி தெரியாமல் மாடிகளில் இருந்து பலரும் கீழே குதித்தனர். இதனால் படுகாயம் ஏற்பட்டும் சிலர் உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலமும், அலறல் சத்தமுமாக பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பிடித்த தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
அத்துடன் தீயில் கருகியும், மூச்சுத்திணறியும் உயிருக்கு போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர். அதைப்போல தீ பிடித்ததால் வெளியேற முடியாமல் ஆங்காங்கே சிக்கியிருந்தவர்களையும் உயிருடன் மீட்டனர்.
நெஞ்சை உருக்கும் இந்த பயங்கர சம்பவத்தில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர்.
இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்தில் தமிழர்கள் இரண்டு பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் தீவிபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த தீவிபத்தில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட காயமடைந்தவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்