என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முதலமைச்சரின் குற்றச்சாட்டுகள் மலிவானவை... தமிழைக் காப்பாற்றுவதில் பிரதமருக்கே முதலிடம்- எல்.முருகன்
- தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் முழுக்க முழுக்க திசை திருப்பும் செயலாகும்.
- திருக்குறளுக்கு உலகம் முழுவதும் கலாசார மையம் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார்.
சென்னை:
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில நேற்று மாலை நடந்த இந்தி மாத கொண்டாட்டம் நிறைவு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும்போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்...' என்ற வரியை விட்டு விட்டு பாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு பிரதமருக்கும் கடிதம் எழுதினார். கவர்னரை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கமளித்தார். அதில் அவர், 'எனக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியும். பக்தி சிரத்தையுடன் அதை பாடுவேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விளக்கத்துக்கு நேற்று நள்ளிரவு உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், 'தமிழ்த்தாய் வாழ்த்து தெரிந்திருந்தால், அதில் ஒரு வரியை பாடாமல் விட்ட போது நிறுத்தி இருக்கலாமே அதை ஏன் கவர்னர் செய்யவில்லை?' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பெங்களூரு விமான நிலையத்தில் நிருபர்கள் அவரிடம் தமிழ்த்தாய் வாழ்த்து-கவர்னர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு எல்.முருகன் பதில் அளித்து கூறியதாவது:-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் முழுக்க முழுக்க திசை திருப்பும் செயலாகும். இந்தி மாதம் மத்திய அரசு துறைகளில் கொண்டாடப்படுவது வழக்கம்.
2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மத்தியில் தி.மு.க.வினர் மந்திரியாக இருந்தார்கள். தி.மு.க. அமைச்சர்கள் இருந்த காலத்தில் இந்த விழாக்கள் நடந்து கொண்டுதான் இருந்தது. இந்த விழா ஒவ்வொரு வருடமும் நடப்பதுதான்.
தமிழை பாதுகாப்பதிலும், உலகளவில் எடுத்து சென்றதிலும் முதன்மையாக இருப்பது பிரதமர் நரேந்திரமோடிதான். திருக்குறளுக்கு உலகம் முழுவதும் கலாசார மையம் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார்.
சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிரதமர் சுற்றுப் பயணம் செய்கின்ற அனைத்து நாடுகளிலும் கலாசார மையம் தொடங்கப்பட்டு வருகிறது. 35 நாடுகளில் திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்த்து தமிழின் பெருமையை உலக நாடுகளுக்கு அறிய செய்தவர்.
ஐ.நா. சபையில் பிரதமர் உரையாற்றும் போது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று பேசி தமிழுக்கு பெருமை சேர்த்தார். தமிழை காப்பாற்றுவதில் பிரதமருக்கே முதல் இடம்.
முதலமைச்சரின் குற்றச்சாட்டுகள் மலிவானது. இப்போது எங்கே பிரச்சனை என்றால் நமது இந்த விவகாரத்தை இந்தியா கூட்டணியினர் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
காலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் டுவிட் போடுகிறார். அதனை தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்தவர்களும், காங்கிரசை சேர்ந்தவர்களும் ஒரு கடிதம் எழுதுகிறார்கள். அதைத் தொடர்ந்து ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தையும் செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் ஏதாவது கிடைக்குமா? என்று தேடுகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் செய்த தவறு எல்லோருக்கும் தெரியும். அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டு விட்டார்கள்.
ஆனால் இதில் கவர்னரை தொடர்புபடுத்துவது எந்தவிதத்திலும் நியாயம் கிடையாது. எந்த விதத்திலும் தர்மமும் கிடையாது. எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்யக்கூடாது.
இன்று மழை வெள்ளத்தை தி.மு.க. அரசாங்கம் சரியாக கையாளவில்லை. ஒருநாள் மழையை சமாளிக்கவே அவர்கள் சரியாக திட்டமிடவில்லை. இதையெல்லாம் மக்களிடம் திசை திருப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இந்தியா கூட்டணியினர் கொஞ்சம் கூட யோசிக்காமல், அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த விஷயத்தை கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சின்ன தவறு நடந்து விட்டது. அந்த தவறுக்கு கவர்னர் எப்படி பொறுப்பாக முடியும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர் எப்படி அதற்கு பொறுப்பேற்க முடியும்.
இதில் அரசியல் செய்வது மிக தெளிவாக தெரிகிறது. இது 1960 கால கட்டங்கள் அல்ல. தி.மு.க. நினைக்கும் அரசியலை இப்போது பண்ண முடியாது. மக்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள்.
நாம் யாருமே இந்திக்கு ஆதரவாளர்கள் கிடையாது. அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களும் கிடையாது.
இந்தியை எதிர்க்கும் தி.மு.க.வினர் தாங்கள் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நடத்த மாட்டோம் என இழுத்து மூடத் தயார் இல்லை. ஏனென்றால் அதன் மூலம் வருமானம் கிடைக்கிறது.
மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனி நடக்காது. ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யுங்கள். டாஸ்மாக்கை ஒழியுங்கள். நீங்கள் இந்த நாடகத்தை எதற்காக நடத்துகிறீர்கள். சென்னை மழை வெள்ள பாதிப்பை தி.மு.க. சரியாக கையாளவில்லை. எனவே மக்களின் கவனத்தை திசை திருப்ப இதை செய்கிறீர்கள். அதனால் கவர்னர் பக்கம் திசை திருப்புகிறார்கள்.
சென்னையில் கூவம், அடையாறு ஆறுகளை சீர் செய்யாமல் மழை வெள்ளத்தை தடுக்க முடியாது. 60 ஆண்டுகள் ஆண்டு விட்டு இந்த சின்ன யோசனை கூட அவர்களுக்கு இல்லை.
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை தி.மு.க.வினர் திசை திருப்புவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்