search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அனல் பறக்கும் பிரசாரம்: ஈரோடு கிழக்கு தொகுதியில் தலைவர்கள் முற்றுகை- வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டை
    X

    அனல் பறக்கும் பிரசாரம்: ஈரோடு கிழக்கு தொகுதியில் தலைவர்கள் முற்றுகை- வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டை

    • தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
    • தலைவர் முற்றுகையிட்டு வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசும், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே முகாமிட்டு வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் கண்டிப்பாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், செந்தில் பாலாஜி, எ.வ. வேலு, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஐ.பெரியசாமி, கீதாஜீவன், காந்தி, சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டை யன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்பட 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிற 24, 25-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். 24-ந்தேதி மாலை வேட்டுக்காட்டு வலசு 19-வது வார்டு, நாச்சாயி டீக்கடை, சம்பத் நகர், பெரிய வலசு, காந்தி நகர், அக்ரஹாரம், வைரபாளையம், ராஜாஜி புரம் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.

    25-ந்தேதி காலை டீச்சர்ஸ் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர், கள்ளுக்கடைமேடு, பழைய ரெயில்வே நிலையம் ரோடு, கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் கோவில், மணிக்கூண்டு, சென்ட்ரல் தியேட்டர், பன்னீர்செல்வம் பார்க் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 19, 20-ந் தேதிகளில் ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ். தென்னரசுக்கு ஆதரவாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 15-ந்தேதி மற்றும் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று மாலை 3-வது நாளாக காவேரி ரோடு, வண்டியூரான் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், வி.வி.சி.ஆர். நகர் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதைத்தொடர்ந்து 2-வது கட்ட பிரசாரமாக எடப்பாடி பழனிசாமி 24-ந்தேதி மாலை டீச்சர்ஸ் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர், பேபி மருத்துவமனை, வளையக்கார வீதி, காந்தி சிலை, மணிக்கூண்டு போன்ற பகுதிகளிலும், 25-ந்தேதி காலை வெட்டுக்காட்டு வலசு, சம்பத் நகர், பெரியவலசு, சத்யா நகர், ராஜாஜி புரம், முத்துசாமி வீதி, தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதேபோல் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணைச்செயலளார் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 13,14,15 ஆகிய நாட்களில் பிரசாரம் மேற்கொண்டார். 2-வது கட்ட பிரசாரமாக 21, 22, 23, 24, 25 ஆகிய நாட்களில் பிரசாரம் செய்கிறார்.

    தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. தலைவர் முற்றுகையிட்டு வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    Next Story
    ×