search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டுகிறது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டுகிறது

    • கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.50 அடியாக இருந்தது.
    • அணையில் இருந்து கால்வாய் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாசன வசதியும், பல்வேறு மாவட்டங்கள் குடிநீர் வசதியும் பெற்று வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை மூலம் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளம் தேக்கி வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையில் 103 அடிக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதாலும், கர்நாடகா அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக குறைந்தது.

    இதையடுத்து குடிநீர் தேவை மற்றும் மீன் வளத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.92 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 496 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 50 அடியை எட்டிவிடும். அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாய் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 262 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    Next Story
    ×