search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜய் கட்சியை தடுப்பது தி.மு.க.-வின் நோக்கமல்ல - அமைச்சர் எ.வ.வேலு
    X

    விஜய் கட்சியை தடுப்பது தி.மு.க.-வின் நோக்கமல்ல - அமைச்சர் எ.வ.வேலு

    • நாங்கள் யாரை கண்டும் பொறாமை கொள்ள மாட்டோம்.
    • தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக தி.மு.க. பாடுபட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்னகப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி மதுரையில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.

    கட்டுமான பராமரிப்பு மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 212 பணிகளை 1015 கோடி ரூபாயில் 281 கிலோமீட்டர் பராமரிப்பு பணிகளை எடுக்கப்பட்டு தற்போது 200 கிலோமீட்டர் பணிகள் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும்.

    அதேபோல் இந்த நிதியாண்டில் 116 கோடி ரூபாய் மதிப்பில் 30 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகளும் சிறப்பாக இந்த ஆண்டுக்குள் முடிவடைந்து விடும். மதுரை மாவட்டத்தில் மட்டும் தரைமட்ட பாலங்கள், திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் இருவழி சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று இருக்கிறது.

    தி.மு.க. அரசு 234 தொகுதிகளிலும் மிக சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக மதுரை மாவட்டம் இருக்கிறது.

    பெரிய மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி திகழ்கிறது. மதுரையில் முக்கிய சந்திப்புகளாக இருக்கக் கூடிய கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பில் ஒரு பாலம். அதேபோல் அப்பல்லோ மருத்துவமனை அருகே ஒரு பாலம் என 2 பாலங்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த பால கட்டுமான பணிகள் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு பெறும்.

    நடிகர் விஜய் கட்சி மற்றும் அவர் நடித்த படத்தை தடுக்க தி.மு.க. முயற்சிக்கிறது என்பது தவறான செய்தி. தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியபோது விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் செயல்படுகின்றன. பல கட்சிகள் காணாமல் போய்விட்டது.

    விஜய் கட்சியை தடுப்பது தி.மு.க.வின் நோக்கமல்ல. நாங்கள் யாரை கண்டும் பொறாமை கொள்ள மாட்டோம். தடுக்க மாட்டோம். முடிந்தால் வாழ்த்து சொல்வோம். புதிய கட்சிகளை தொடங்குவது ஜனநாயக உரிமை. தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக தி.மு.க. பாடுபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×