search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்தியா கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை மக்களை கவரும் வகையில் உள்ளது- அமைச்சர் மனோ தங்கராஜ்
    X

    இந்தியா கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை மக்களை கவரும் வகையில் உள்ளது- அமைச்சர் மனோ தங்கராஜ்

    • முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள்.
    • தேசத்தினுடைய கடன் எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு கடன் உயர்ந்துள்ளது?

    திருவட்டார்:

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை காய்ந்து போன சருகு போன்றது. அதில் ஓன்றுமே இல்லை. அதை காற்றில் பறக்க விடலாம். இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்களை கவரும் வகையில் உள்ளது.

    100 நாள் வேலை வாய்ப்பை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருப்பது, கிராமப்புற பொருளாதாரத்தை புரட்டி போடும் அளவிற்கு உள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் உள்ள பல்வேறு வேறுபாடுகள் களையப்படும். ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நம்முடைய உழைப்பு நமக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசின் கஜானாவில் சேர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு அதிகமான சிறு தொழில்கள் அழிந்ததற்கும் ஜி.எஸ்.டி. காரணமாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. மறுசீராய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

    கல்வியை எடுத்துக்கொண்டால் இன்றைக்கு சைனிக் ஸ்கூல், இந்தியாவினுடைய முக்கியமான பள்ளி. ராணுவத்திற்கு குழந்தைகளை தயாராக்க கூடிய அந்த பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி உள்ளது. அதை சார்ந்த அமைப்புகளுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அநீதியை செய்தார்கள்.

    இதை எல்லாம் ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து பார்க்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்யப்படுவதாக, பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவரை பார்த்து சிரிக்கவா, அழவா என்று தெரியவில்லை.

    அவர் தான் மதத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் எங்கள் பிரசாரத்தில் மதத்தைப் பற்றி பேசியுள்ளோமா? 100 சதவீதம் நாங்கள் பேசவில்லை.

    மதம் என்பது ஒரு மனிதனுடைய நம்பிக்கையை சார்ந்தது. அந்த நம்பிக்கை மாறுபட்டதற்கு உட்பட்டது. இன்று ஒரு நம்பிக்கையில் இருப்பான், நாளை ஒரு நம்பிக்கையில் இருப்பான். ஆனால் அந்த மதம் ஒன்றை மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தான். இதை யாரும் மறுக்க முடியாது.

    முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சாமானிய மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் ஆகியவை மக்களிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக மத உணர்வை தூண்டும் வகையில் பா.ஜ.க. நாடு முழுவதும் இதனை செய்து கொண்டிருக்கிறது. அதைத்தான் பொன் ராதாகிருஷ்ணன் முடிந்த அளவு செய்து கொண்டிருக்கிறார்.

    மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அதிகமாக செய்ததாக கூறினார்கள். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதாக கூறினார்கள். ஆனால் கொண்டு வரவில்லை. அறிவித்ததோடு நிற்கிறது. அவர்கள் தவறை அடையாளப்படுத்தும் வகையில் தான் செங்கலை தூக்கி பிரசாரம் செய்து வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

    அ.தி.மு.க. குறித்து நான் பேச விரும்பவில்லை. அவர்கள் வந்து போய் உள்ளனர். அ.தி.மு.க. இயக்கத்திற்கு யார் பிரதமர் வேட்பாளர் என்று யோசிக்க வேண்டும். 2 கூட்டணியிலும் இல்லாதவர்கள் எப்படி பேசுவார்கள்?.

    பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பெட்ரோல், டீசல் விலை எப்படி இருந்தது? ஆனால் மோடியின் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை எப்படி உயர்ந்துள்ளது?

    தேசத்தினுடைய கடன் எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு கடன் உயர்ந்துள்ளது? பல மடங்கு பட்டினி சாவு அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×