search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    6 வயதில் மாயமான மாணவி 9 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு: நெகிழ்ச்சி அடைய வைத்த சம்பவம்
    X

    6 வயதில் மாயமான மாணவி 9 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு: நெகிழ்ச்சி அடைய வைத்த சம்பவம்

    • பிரியா உண்மையிலேயே அவர்களது மகள் தான் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அவரிடம் ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
    • தன்னை பெற்றோருடன் சேர்த்த அதிகாரிகள் அனைவருக்கும் கை கூப்பி நன்றி தெரிவித்தபடி பிரியா பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றார்.

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. மரம் வெட்டும் தொழிலாளி.

    இவருடைய மனைவி சின்னபாப்பா. தம்பதிக்கு 5 மகன், 5 மகள் உள்ளனர். இவர்கள் வீட்டில் கடைக்குட்டி மகள் பிரியா.

    கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் வெளியே சென்றபோது பிரியா திடீரென காணாமல் போனார். மகளை பல்வேறு இடங்களில் அவரது பெற்றோர் தேடினர். அவர்களிடம் பிரியாவின் போட்டோ எதுவும் இல்லை. மேலும் போலீசிடம் புகார் கொடுக்கக்கூடிய விவரமும் தெரியவில்லை. அதனால் உள்ளுக்குள் அழுது துடித்தனர்.

    தினந்தோறும் மகளை எண்ணி அவர்கள் தவித்தனர்.

    இதற்கிடையே 6 வயது சிறுமியாக இருந்த பிரியாவை மீட்ட பெண் ஒருவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்தார்.

    அந்த காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது உரிமம் இன்றி இயங்கியது தெரிய வந்தது.

    இதையடுத்து குழந்தைகள் நலகுழுவினர் பிரியாவை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர். அங்கு வளர்ந்த அவர் 10-ம் வகுப்பு வரை படித்தார்.

    பெற்றோரை விட்டு பிரிந்த பிரியாவுக்கு அவரது பெற்றோரின் பெயர் நன்றாக தெரிந்தது. இதனால் தனக்கு பெற்றோர் இருப்பதாக அடிக்கடி காப்பகத்தில் உள்ள அதிகாரியிடம் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சொந்த ஊரும் அவருக்கு நினைவுக்கு வந்தது. இது குறித்து காப்பக மேலாளரிடம் கூறினார்.

    இதையடுத்து அதிகாரிகள் பிரியாவின் சொந்த ஊருக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து தகவல் தெரிவித்தனர். அதனை கேட்டு அவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். மகளை உடனடியாக பார்க்க வேண்டும் என ஓடோடி வந்தனர்.

    பிரியா உண்மையிலேயே அவர்களது மகள் தான் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அவரிடம் ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பிரியாவின் பெற்றோர்களான ஏழுமலை, சின்னபாப்பா மற்றும் பிரியாவிற்கு கடந்த 2021-ம் ஆண்டு டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது.

    அதன்முடிவில் பிரியாவின் தந்தை ஏழுமலை என்று தெரிய வந்தது.

    இது குறித்து முறையாக வேலூர் கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவின் பேரில் பிரியாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.

    நேற்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முன்னிலையில் பிரியா பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    அப்போது பெற்றோர் பிரியாவை கட்டி அணைத்து அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவரது முகத்திலும் ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை காண முடிந்தது.

    தன்னை பெற்றோருடன் சேர்த்த அதிகாரிகள் அனைவருக்கும் கை கூப்பி நன்றி தெரிவித்தபடி பிரியா பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றார்.

    வீட்டுக்கு சென்றதும் பிரியாவை அவரது உறவினர்கள் திரண்டு வரவேற்று அழைத்து சென்றனர். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

    9 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் சேர்ந்த பிரியா கூறியதாவது :-

    6 வயதில் நான் எப்படி மாயமானேன் என்பது எனக்கு நினைவு இல்லை.

    அப்போது எனது பெற்றோர், ஊர் விவரங்களை சொல்லவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் அது என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் வளர்ந்தேன். அங்கிருந்தவர்கள் என்னை படிக்க வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டேன். அப்போது எனக்கு ஓரளவு விவரம் தெரியவந்தது.

    அங்கிருந்த அதிகாரிகளிடம் எனக்கும் குடும்பம் இருக்கிறது. எனது பெற்றோர் பெயர் தெரியும் ஊர் தெரியும் என கூறினேன்.

    அவர்கள் அது பற்றி விவரங்களை கேட்டனர். நானும் கூறினேன்.

    இதை தொடர்ந்து எனது பெற்றோர் குறித்த விவரங்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அவர்களை தேட ஆரம்பித்தனர்.

    காப்பகத்தில் மற்ற குழந்தைகளை பார்க்க அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் வருவார்கள்.

    அதனை பார்க்கும்போது நமக்கும் குடும்பம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே கடவுளே என்னை எப்படியாவது என் பெற்றோரிடம் சேர்த்துவிடு என அழுது புலம்புவேன்.

    அவர்கள் நினைவில் வாடினேன். நான் தினந்தோறும் வேண்டாத தெய்வம் இல்லை.

    என்னை எப்படியாவது என்னை பெற்றோருடன் சேர்த்து விடுங்கள் என தினந்தோறும் அதிகாரிகளும் கூறிக்கொண்டே இருப்பேன்.

    அதிகாரிகளும் தீவிரமாக தேட தொடங்கினர். ஒரு வழியாக எனது பெற்றோரை கண்டு பிடித்தனர்.

    டி.என்.ஏ. பரிசோதனைக்கு பிறகு நான் பெற்றோருடன் சேர்ந்துள்ளேன். நான் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறேன்.

    என்னுடன் பிறந்தவர்களில் 7 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. இன்னும் 2 அண்ணன்கள் மட்டுமே திருமணமாகாமல் உள்ளனர். வீட்டில் உள்ள நல்ல காரியங்களில் கூட பங்கேற்க முடியாமல் போய்விட்டது.

    எனது பெற்றோரும் என்னை பல ஆண்டுகள் தேடியுள்ளனர். கடவுள் அனுக்கிரகத்தால் மீண்டும் சேர்ந்து விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×