search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அ.தி.மு.க.வினர் ஒன்றிணைய எடப்பாடியை நீக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் நிர்வாகிகள் பரபரப்பு பேச்சு
    X

    அ.தி.மு.க.வினர் ஒன்றிணைய எடப்பாடியை நீக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் நிர்வாகிகள் பரபரப்பு பேச்சு

    • அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார போக்கை உணர்ந்து மீண்டும் ஒன்று சேர வேண்டும்.
    • எடப்பாடி பழனிசாமியும் ஒரே தலைமையின் கீழ் வர வேண்டும் இல்லையென்றால் அவரை நீக்கி விட்டு தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், நாங்களே உண்மையான அ.தி.மு.க. என்று தெரிவித்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில் அந்த பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் நீடிக்கிறார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக செயல்படும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களையும், மாநில நிர்வாகிகளையும் ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி இன்று ஆலோசனை நடைபெற்றது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என மொத்தம் 200 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று ரித்தர்டன் சாலையில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கையெழுத்து போட்டு விட்டு அரங்கத்துக்குள் சென்றனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் பெயரிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சட்டப் போராட்டம் நடத்தி வரும் அவர் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் பற்றி இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு முன்னணி நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காட்டமாக பேசினார்கள்.

    முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலோசனை கூட்டத்துக்கு என்னை தலைமை ஏற்க வைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயக்கத்தை காப்பாற்றுவதற்குதான் நாம் கூடி உள்ளோம். உழைப்பவரே உயர்ந்தவர் என்று எம்.ஜி.ஆர். கூறுவார்.

    எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் வாங்கும் போது, இதனை அவர் குறிப்பிடுவார். இலக்கியத்தில் இடம் பெறும் செருகல்களை புலவர்கள் நீக்குவார்கள். இலக்கியத்தில் மட்டுமல்ல இயக்கத்திலும் இடைச்செருகல்கள் வந்துள்ளன. அவைகளை அப்புறப்படுத்த வேண்டும். காப்பியங்களில் எவ்வாறு இடைச்செருகல்கள் அகற்றப்பட்டதோ அதே போன்று நம் இயக்கத்தில் உள்ள இடைச்செருகல்களையும் நீக்க வேண்டும். நான் இடைச்செருகல் என்று குறிப்பிட்டது எடப்பாடி பழனிசாமியை அல்ல.

    வைத்திலிங்கம்:- தவழ்ந்து சென்று முதல்-அமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி. அவர் கூட்டிய பொதுக்குழு, செயற்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தை நீக்க அதிகாரம் இல்லை. அது பொதுக்குழு அல்ல. பொய் குழு. கட்சியினரால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 2026-ம் ஆண்டு வரை உள்ளது. வருகிற தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமி தனி மரமாகி அரசியல் அனாதையாகி விடுவார்.

    எடப்பாடி பழனிசாமியை நீக்கி விட்டு அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    புரட்சித்தலைவியின் ஒரே அரசியல் வாரிசு ஓ.பன்னீர்செல்வம்தான். இந்த இயக்கம் வேறு ஒருவரின் கைக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகவும் குடும்ப அரசியலை வீழ்த்துவதற்காகவும் ஓ.பன்னீர்செல்வத்திடம் புரட்சித் தலைவி 2 முறை ஆட்சியை ஒப்படைத்தார்.

    இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து போராடி வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டு கால ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர் ஓ.பன்னீர் செல்வம். தன்னை விட கட்சிதான் முக்கியம் என்று கருதி விட்டுக் கொடுத்தவர். பிரிந்து சென்ற தொண்டர்கள் மீண்டும் திரும்ப வர வேண்டும் ஒற்றை குடையின்கீழ் ஓ.பி.எஸ். தலைமையில் திரள வேண்டும்.

    விசுவாசத்துக்கு அடையாளமாக ஓ.பி.எஸ். உள்ளார். தொண்டர்களை பாதுகாக்கும் வகையில் 1 ½கோடி தொண்டர்களுக்காக பாடுபட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி நோயாக உள்ளார். அவரிடமிருந்து மருந்தாக ஓ.பி.எஸ். கட்சியை மீட்டு வருகிறார்.

    இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது டெண்டர் படை. ஓ.பி.எஸ்.சிடம் இருப்பது தொண்டர் படை. தொண்டர்கள் நினைத்தால் எடப்பாடி பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு அ.தி.மு.க. சட்ட விதிகளில் இடம் உள்ளது.

    இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரியாக ஆள நினைக்கிறார். இதனை பார்த்துக் கொண்டு தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர் சூழ்ச்சி, தந்திரத்துடனேயே கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். இது போன்ற சர்வாதிகார போக்கு தலைதூக்குவதை நாம் அனுமதிக்க முடியாது. அதனை அனுமதித்தால் அ.தி.மு.க. அழிந்து விடும்.

    நியாயமானவர்கள், தர்மத்தை உணர்ந்தவர்கள், மனசாட்சிக்கு பயந்தவர்கள் ஓ.பி.எஸ்.சை ஆதரித்து வருகிறார்கள். 14 ஆண்டுகளாக கட்சியின் பொருளாளராக இருந்த ஓ.பி.எஸ். கட்சியின் கடனை அடைத்து, 236 கோடி ரூபாயை இருப்பு வைத்தவர். ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு வந்த வாய்ப்பை தட்டி பறித்தனர்.

    வருகிற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குவார். அதற்கான காலம் கனிந்து வருகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார போக்கை உணர்ந்து மீண்டும் ஒன்று சேர வேண்டும். எடப்பாடி பழனிசாமியும் ஒரே தலைமையின் கீழ் வர வேண்டும் இல்லையென்றால் அவரை நீக்கி விட்டு தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    Next Story
    ×