search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை
    X

    ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை

    • அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றி ஓ.பன்னீர்செல்வம் தீவிர யோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
    • ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் சிவில் வழக்கை மட்டுமே தங்கள் கடைசி ஆயுதமாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் நம்பி இருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி வசமானது. இதை தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    கடைசி வரை சட்டப் போராட்டம் நடத்தியும் இப்படி ஆகிவிட்டதே என்ற விரக்தியில் ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்.

    அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றி ஓ.பன்னீர்செல்வம் தீவிர யோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

    இன்று ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சென்னை ராணிமேரி கல்லூரி முன்பு அமைந்து உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்தார்.

    அதன் பிறகு பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தற்போதைய நிலையில், ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் சிவில் வழக்கை மட்டுமே தங்கள் கடைசி ஆயுதமாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் நம்பி இருக்கிறார்கள்.

    ஏனெனில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதாவது பொதுக்குழு கூட்டியதை அவர் எதிர்க்க முடியாது. மற்றபடி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அவர் எதிர்க்கலாம். அதோடு தேர்தல் ஆணையத்திலும் முறையிடலாம் என்று கூறியிருக்கிறது. இதைத்தான் தற்போது ஓ.பன்னீர் செல்வம் முழுமையாக நம்பி இருக்கிறார்.

    ஏற்கனவே சிவில் கோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் விதி முறைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதை மீறி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்டுகிறார்.

    அது விதிமுறைகளுக்கு எதிரானது என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையில்தான் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று அறிவித்தார். அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் ஐகோர்ட்டிலேயே மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த டிவிஷன்பெஞ்ச் பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவைத்தான் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

    சிவில் கோர்ட்டில் தொடரப்பட்ட மூல வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. எனவே, அந்த வழக்கின் முடிவை ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்க்கிறார். எனவே, கட்சி நடத்த முடியாத நிலை இருப்பதால் அந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி முறையிட அவர் முடிவு செய்துள்ளார்.

    அடுத்ததாக தேர்தல் ஆணையத்தையும் அணுக முடிவு செய்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் நீடிக்கிறது. பொதுக்குழு தீர்மானங்களையும் பரிசீலித்து வருகிறோம். அதை இன்னும் ஏற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து இருந்தது. எனவே சிவில் வழக்கு முடிவு வரும்வரை அதே நிலையே தொடர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கவும் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து இருக்கிறார்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முறையிட இருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இந்த முட்டுக்கட்டையை போட திட்டமிட்டுள்ளார்.

    Next Story
    ×