என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பிரதமர் மோடி, அமித்ஷா இன்று தமிழகம் வருகை- உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு
- ஒரு அறையில் பிரதமர் அலுவலகமும், மற்றொரு அறையில் சமையல் அறையும், மற்றொரு அறையில் பிரதமர் தங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- பிரதமர் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள அறையில் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி:
பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் போது பிரசாரம் முடிவடைந்ததும் பிரதமர் மோடி ஆன்மீக தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் தேர்தல் முடிவடைந்த போது அவர் தியானம் மேற்கொண்டார்.
அதேபோல் தற்போதும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அவர் கன்னியாகுமரியில் கடல் நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இன்று முதல் வருகிற 1-ந்தேதி வரை 3 நாட்கள் தியானம் செய்கிறார்.
இதற்காக அவர் இன்று வாரணாசியில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக திருவனந்தபுரத்திற்கு வருகிறார். அங்கிருந்து பிற்பகல் 3:55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகிறார். இங்கு அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மாலை 5:15 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் இருந்து தனி படகு மூலமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்கிறார்.
அங்கு முதலில் விவேகானந்தர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு அங்குள்ள தியான மண்டபத்திற்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார்.
வருகிற 1-ந்தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் அங்கே தங்கியிருந்து பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்தில் மோடி தங்குவதால் அங்கு மூன்று அறைகள் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு அறையில் பிரதமர் அலுவலகமும், மற்றொரு அறையில் சமையல் அறையும், மற்றொரு அறையில் பிரதமர் தங்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள அறையில் முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருக்கிறது.
ஜூன் 1-ந்தேதி மதியம் 3 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். பின்பு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனி படகு மூலமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக ஹெலிகாப்டர் தளத்திற்கு மாலை 3:25 மணிக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு செல்கிறார். மாலை 4:05 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகாசி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், 4 டி.ஐ.ஜி.கள் மற்றும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
களியக்காவிளை, அஞ்சு கிராமம் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.
கடலோர பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கரை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
விவேகானந்தர் மண்டபத்தை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் கடல் பரப்பளவு பகுதிக்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் மற்றும் கப்பற் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சத்தியகிரீசுவரர் சிவாலயமும், சத்தியமூர்த்திப் பெருமாள் கோவிலும் மிகவும் புகழ்பெற்ற தலங்களாகும்.
இந்த கோவிலின் அருகே கோட்டையின் கீழ்ப்பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி தனி கோவில் கொண்ட பைரவர் தலம் இது ஒன்றே ஆகும்.
இந்த கோட்டை பைரவரிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும். அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவருக்கு அபிஷேகம், வடமாலை, சந்தனகாப்பு செய்து நெய்தீபம், மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் விலகும்.
பிதூர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி, எலுமிச்சம் பழமாலை சூட்டி எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதூர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
இன்று (வியாழக்கிழமை) தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு மத்திய மந்திரி அமித்ஷா சாமி தரிசனம் செய்ய வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) வாரணாசியில் இருந்து மாலை 3.20 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார்.
பின்னர் அவர் மாலை 3.25 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் திருமயம் காலபைரவர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் மாலை 5.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் மாலை 5.25 மணி அளவில் தனி விமானம் மூலம் திருப்பதிக்கு செல்கிறார்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு திருமயத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோட்டை கால பைரவர் கோவில் மற்றும் சத்தியகிரீசுவரர் கோவிலில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்