என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பிரதமர் மோடி வாகன பேரணியில் 1 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்- போலீஸ் கட்டுப்பாட்டில் கோவை
- மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பிரதமரின் தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடக்க உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் தமிழகத்துக்கும் ஏற்கனவே 3 முறை வந்து ஆதரவு திரட்டி உள்ளார். தற்போது 4-வது முறையாக மீண்டும் நாளை (18-ந் தேதி) தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். நாளை கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன பேரணியில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.
இதற்காக அவர் நாளை மாலை கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார். அங்கு அவருக்கு மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் ஏராளமான பா.ஜ.கவினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்டதும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் அவினாசி சாலை, புரூக்பாண்ட் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து வாகன பேரணி நடக்கும் சாய்பாபா காலனிக்கு செல்கிறார்.
அவர் செல்லும் வழிகளிலும் சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு பா.ஜ.கவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மாலை 5.45 மணியளவில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் சிக்னல் பகுதியில் இருந்து பிரதமர் மோடி வாகன பிரசாரத்தை தொடங்குகிறார். பேரணி நடைபெற உள்ள சாலையானது 2 வழிச்சாலையாகும். இந்த சாலையின் இடதுபுறம் வழியாக பிரதமர் மோடி பேரணியாக செல்கிறார். வலதுபுறம் பொதுமக்களும், தொண்டர்களும் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரின் முன்பகுதியில் நின்றபடி அங்கு திரண்டு நிற்கும் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
சில இடங்களில் பிரதமர் மோடி காரை விட்டு இறங்கி மக்களை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. சாய்பாபா காலனியில் தொடங்கும் வாகன பேரணி மாலை 6.45 மணிக்கு ஆர்.எஸ்.புரம் காமராஜர்புரம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவு பெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேரை பா.ஜ.க.வினர் திரட்ட உள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசாரம் என்பதால் கோவை பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடியின் வாகன பேரணி கவுண்டம்பாளையம் எரு கம்பெனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 3.5 கி.மீ தூரம் வரை நடப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ரோடு ஷோவானது 2 கி.மீ தூரமாக குறைக்கப்பட்டு உள்ளது.
வாகன அணிவகுப்பை முடித்து கொண்டு பிரதமர் மோடி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். நாளை இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் காலை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கோவை விமானம் நிலையம் சென்று, கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சேலத்திற்கு வருகை தந்து அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளான சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், அவர் தங்க உள்ள அரசு விருந்தினர் மாளிகை மற்றும் கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநகர் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர பிரதமரின் தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுதவிர ஓட்டல்கள், லாட்ஜ்கள், விடுதிகளிலும் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கவும் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி, கோவை சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் டிரோன்கள் பறக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்