search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாம்பன் புதிய ரெயில் பாலத்தை அடுத்த மாதம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
    X

    பாம்பன் புதிய ரெயில் பாலத்தை அடுத்த மாதம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

    • புதிய ரெயில் பாலம் கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    மண்டபம்:

    தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் பாக் ஜலசந்தியில் அமைந்துள்ளது பாம்பன் ரெயில் பாலம். ராமேசுவரம் தீவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் கடந்த 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. கடல் வழி வணிகத்தில் நம் நாடு தழைத்தோங்கிய காலத்தில் இந்த ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

    அதற்கேற்ப கப்பல்கள் செல்லும் வகையில் பாலத்தின் நடுப்பகுதியில் தண்டவாளத்தை இரண்டாக பிரிப்பது போன்று தூக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 2.05 கி.மீ. நீளமுள்ள இது இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெயரையும் பெற்றது. 1964-ம் ஆண்டு பாம்பன் தீவை பெரும் புயல் தாக்கியது. அப்போது இந்த பாலம் சேதம் அடைந்து, விரிவான பழுது பார்க்கும் பணிகள் நடந்தது.

    இதற்கிடையே கடந்த 1988-ல் பாம்பன் ரெயில் பாலத்துக்கு இணையான ஒரு சாலைப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதுவரை இந்த ரெயில் பாலம் மட்டுமே மண்டபத்திற்கும் ராமேசுவரத்திற்கும் இடையிலான ஒரே இணைப்பாக இருந்தது. தற்போது 110 ஆண்டுகளை கடந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பு காரணமாக பாலம் அதன் ஸ்திரத்தன்மையை இழுந்து பலத்த சேதம் அடைந்தது.

    மேலும் இந்த பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாலும் பழைய பாலம் அருகிலேயே புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான முடிவினை மத்திய ரெயில்வே அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தது. முதற்கட்டமாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2019 மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து 2019, ஆகஸ்டு 11-ந்தேதி பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்டுவதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின. அப்போது 2021, செப்டம்பர் மாதத்திற்குள் புதிய பாம்பன் ரெயில் பாலத்திற்கான பணிகள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால், பாம்பன் கடற்பகுதியில் அவ்வப்போது ஏற்பட்ட கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நாளில் முடிக்க முடியவில்லை. தொடர்ந்து, புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்திய ரெயில்வேயின் பொறியியல் பிரிவான ரெயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மூலம் பணிகள் நடைபெற்றன.

    இந்தநிலையில் பழைய பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2023 டிசம்பர் மாதம் முதல் ராமேசுவரத்துக்கு முற்றிலுமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ராமேசுவரத்துக்கு வரும் ரெயில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரெயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்படுகிறது. இதனால் கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்துக்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது கட்டப்படும் புதிய பாம்பன் ரெயில் பாலத்தின் நீளம் 2,078 மீட்டர் ஆகும். கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 101 தூண்களைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கடலில் இரட்டை வழித்தடத்துடன் மின்சார ரெயில்களை இயக்கும் வகையில் பாலத்தின் தூண்கள் வடிவைமைக்கப்பட்டுள்ளது.

    தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, இந்தத் தூண்கள் இடையே ஒரு வழித்தடத்துக்கான 60 அடி நீளம் கொண்ட 100 இணைப்பு கர்டர்களில் மண்டபம் பகுதியில் தூக்குப் பாலம் வரையிலுமான 76 கர்டர்கள் பொருத்தப்பட்டு விட்டன. அவை 18.3 மீட்டர் நீளம் கொண்டதாகும்.

    புதிய ரெயில் பாலம் கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது பழைய ரெயில் பாலத்தை விட சுமார் 1½ (ஒன்றரை) மீட்டர் உயரம் அதிகம் என்பதால், பாம்பன் பக்க நுழைவு பகுதியில் இருந்த தண்டவாளங்களும், சிலீப்பர் கட்டைகளும் அகற்றப்பட்டு இருப்புப்பாதையை உயரமாக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதன் மூலம் ரெயில் பாலத்துக்கு கீழ் பெரிய அளவிலான கப்பல்கள், விசைப்படகுகள் தடையின்றி செல்ல முடியும்.

    பாம்பன் சாலை பாலத்துக்கு இணையான உயரத்தில், புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் அருகில் செங்குத்து தூக்கு பாலத்துக்கான ஆபரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக இரண்டு மாடி கட்டிடமும் கடலிலேயே கட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் நடுப்பகுதியான தூக்கு பாலம் இணைக்கும் பணியும் முடிவடைந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் ராமேசுவரம்-மண்ட பம் இடையேயான ரெயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்திக்குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே புதிய பாம்பன் ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் மற்றும் பல திட்டங்களையும் திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×