search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எதிர்கட்சிகளில் இதுவரை யார் மாப்பிள்ளை என்றே தெரியவில்லை- அண்ணாமலை தாக்கு
    X

    எதிர்கட்சிகளில் இதுவரை யார் மாப்பிள்ளை என்றே தெரியவில்லை- அண்ணாமலை தாக்கு

    • தேர்தலில் மோடி 400 எம்.பிக்கள் வேண்டும் என்று சொல்லி வருகிறார்.
    • பிரதமர் மோடி எந்த ஒரு முடிவு எடுத்தாலும் பாராளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களின் ஆதரவு தேவை.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் இன்று காலை மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மலையடி வாரத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து வடவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அண்ணாமலை வடவள்ளி பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    2024-ம் ஆண்டு நடக்கிற பாராளுமன்ற தேர்தலானது ஒரு வித்தியாசமான தேர்தல். மீண்டும் பிரதமர் மோடியே வெற்றி பெறுவார் என்று உறுதியாக தெரிந்து கொண்டு நடக்கிற தேர்தல் தான் இது.

    கடந்த 10 வருடமாக தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி நிறைவேற்றிய திட்டங்களால் தற்போது மிகப்பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

    2024-2029 காலகட்டம் என்பது தற்போதைக்கு முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில் தான் உலக அரங்கில் இந்தியா வல்லரசாக போகிறது. அதனால் இந்த தேர்தலில் மோடி 400 எம்.பிக்கள் வேண்டும் என்று சொல்லி வருகிறார். ஒவ்வொரு குடும்பத்தினரும் பா.ஜனதாவுக்கும், பிரதமருக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.


    பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வருகிற காலத்தில் பொருளாதாரத்தில் இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேறும். வறுமை கோட்டிற்கு கீழ் இருந்த பல கோடி மக்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் முன்னேறி உள்ளனர்.

    பிரதமர் மோடி எந்த ஒரு முடிவு எடுத்தாலும் பாராளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களின் ஆதரவு தேவை. அதனால் வருகிற தேர்தலில் 400 எம்.பிக்கள் தேவை. அதனை கொடுக்க மக்களும் தயாராகி விட்டனர். கோவை தொகுதியில் போட்டியிடும் என்னையும் வெற்றி பெற செய்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.

    இந்தியாவில் 70 வருடமாக எடுக்கப்படாத முக்கிய முடிவுகள் இனிமேல் எடுக்கப்பட உள்ளது. இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்ல வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.

    எதிர்கட்சிகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யார் பிரதமர் வேட்பாளர் என்று தெரியவில்லை. இன்னும் அவர்களில் யார் மாப்பிள்ளை என்பதே தெரியவில்லை.

    தி.மு.க.வினர் பற்றி இனி பேச வேண்டிய அவசியம் இல்லை. கடந்த 33 மாதங்களாக தி.மு.கவினர் குறித்து நாம் கடும் விமர்சனங்கள் வைத்து வருகிறோம். ஆனால் அவர்கள் அதற்கு பிறகும் திருந்தவில்லை. அப்படி இருக்கையில் இந்த 16 நாள் பிரசாரத்தில் பேசுவதால் மட்டும் அவர்கள் என்ன திருந்தி விடவா போகிறார்கள்? இல்லவே இல்லை.

    தற்போதைய காலகட்டத்தில் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த பலரும் மீண்டும் களத்தில் இறங்கி உள்ளனர்.

    கோவை தொகுதி எம்.பியாக இருந்தவர் கோவைக்கு தேவையான எந்த திட்டத்தையும் பிரதமரிடம் கேட்டு பெற்று நிறைவேற்ற தவறிவிட்டார். கோவையில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு ஒதுக்கிய நிதியும் முறையாக எந்த திட்டத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை.

    நான் வெற்றி பெற்றதும் கோவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வன். தற்போது ஐ.ஓ.பி காலனியில் குப்பை சுத்திகரிப்பு நிலையம் வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சென்னை 45-வது இடத்தில் இருந்தது. தற்போது சென்னை அந்த திட்டத்தில் 199-வது இடத்திற்கு சென்று விட்டது. நகரங்கள் அனைத்தும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. நான் வெற்றி பெற்றதும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். நகரங்கள் அனைத்தும் சுத்தமானதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×