search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பலத்த காற்று வீசுவதால் கடலுக்கு செல்ல தடை: ராமேசுவரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
    X

    பலத்த காற்று வீசுவதால் கடலுக்கு செல்ல தடை: ராமேசுவரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

    • 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    • கடலோர பாதுகாப்பு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ராமேசுவரம்:

    தென்மேற்கு வங்ககடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கடற்பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவகாற்று தீவிரமடைந்துள்ளது.

    இதன்காரணமாக வங்கக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட பாக்ஜலசந்தி கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையொட்டி மீன் வளத்துறை இன்று (சனிக்கிழமை) முதல் மறுஉத்தரவு வரும் வரை ராமேசுவரம், தனுஷ்கோடி, மண்டபம், பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிப்பதாக அறிவித்தது.

    இதனைதொடர்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர், தேவி பட்டணம், சோளியக்குடி, தொண்டி ஆகிய துறை முகங்களில் இருந்து 1,650 க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது. கனமழை பெய்வதால் சாலையில் மழை நீர் தேங்காதவாறு ராமேசுவரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனுஷ்கோடி பகுதியில் இன்று வழக்கத்தை விட கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    காற்றின் வேகமும் அதிகரித்து காணப்பட்டதால் மணல்கள் சாலைகளில் பரவின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் கடலோர பாதுகாப்பு போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஏற்கனவே இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு இடையே மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகிறோம். வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் கடலுக்கு சென்று வந்த நிலையில் தற்போது மீன்பிடிக்க செல்வது குறைந்து வருகிறது. இதனால் மாதத்தில் 15 நாட்கள் வேலையிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் வானிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

    Next Story
    ×