search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜெயலலிதாவை புகழ்வதில் பா.ஜ.க. தலைவர்களுக்கு உள்நோக்கம் உள்ளது- ஆர்.பி.உதயகுமார்
    X

    ஜெயலலிதாவை புகழ்வதில் பா.ஜ.க. தலைவர்களுக்கு உள்நோக்கம் உள்ளது- ஆர்.பி.உதயகுமார்

    • கேரளா அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதில் நமக்கு ரணமாக இருக்கிற மனதிலே வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
    • தென்மேற்கு பருவமழையில் நமக்கு உபரி நீர் கேரளாவில் இருந்து கிடைக்கிற போதெல்லாம் அதில் பிரச்சனைகளை இந்த கேரளா அரசு உருவாக்கி வருகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த அரசு கையாலாகாத அரசாக மக்களுடைய வாழ்வாதார ஜீவாதார உரிமைகளை விட்டுக் கொடுக்கின்ற ஒரு அரசாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிய அணை கட்டும் பிரச்சனை இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆகவே முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவோம் என்ற கேரளா அரசு தொடர்ந்து இன்றைக்கு தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    நடவடிக்கை எடுக்கக்கூடிய வேளையிலே தி.மு.க. அரசு மவுனம் சாதித்துக் கொண்டிருப்பது நமது மக்களுடைய வாழ்வாதார மக்கள் ஜீவாதாரம் பறிபோகக் கூடிய ஒரு நிலையை இன்றைக்கு இந்த தி.மு.க. அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. நம்முடைய மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுடைய ஜீவாதார, வாழ்வாதார உரிமையாக இருக்கக்கூடிய இந்த அணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுகிற அரசுக்கு உள்ளது.

    ஏற்கனவே கேரளா அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதில் நமக்கு ரணமாக இருக்கிற மனதிலே வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதாக உள்ளது. தென்மேற்கு பருவமழையில் நமக்கு உபரி நீர் கேரளாவில் இருந்து கிடைக்கிற போதெல்லாம் அதில் பிரச்சனைகளை இந்த கேரளா அரசு உருவாக்கி வருகிறது. தற்போது 366 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று ஜனவரி மாதமே கேரளா அரசு தெரிவித்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய இந்த தி.மு.க. அரசு மவுனம் காப்பது என்பது நம்முடைய ஜீவாதார உரிமை காவு கொடுக்கின்ற சூழலை பார்க்கின்றோம்.

    ஆகவே சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு இன்றைக்கு மனுதாக்கல் செய்து மீண்டும் பிரச்சனையை கேரளா அரசு ஏற்படுத்தியிருக்கிறது. உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக எட்டு கட்ட ஆய்வுக்கு பிறகு முல்லை பெரியாறு அணை வலிமையாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. இன்னும் பல நூறு ஆண்டுகள் இது மிகவும் பாதுகாப்பானது என்பதை தெள்ளத்தெளிவாக நிபுணர்கள் குழுவோடு தெரிவித்துள்ள்ளார்கள்.

    தீர்வு காண்பதற்கு ஜெயலலிதா உச்சநீதிமன்றத்திலே நமக்கு தீர்ப்பை பெற்றுக்கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து இதே மதுரையில் ஒட்டுமொத்த விவசாயிகள் பங்கேற்று மாநாடு நடத்திக் காட்டினார்கள். இன்றைக்கு தமிழன் உரிமை எங்கே போனது என்று கேட்கிற ஒரு சூழ்நிலையில் தி.மு.க. அரசு மவுனம் சாதிப்பது நமக்கு வேதனையாக இருக்கிறது. கேரளா அரசின் செயலுக்கு இப்போதுதான் கடிதம் எழுதியிருக்கிறார்.

    ஜனவரி மாதமே அணை கட்ட கேரளா அரசு பரிந்துரை கடிதம் கொடுத்து சுற்றுச்சூழல் மையம் அதை ஏற்றுக்கொண்டு மத்திய அரசின் நிபுணர் குழு உத்தரவு பிறப்பித்த பிறகு கடிதம் எழுதுகிறார். இது தொடர்பாக எடப்பாடியார் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இதுபோன்ற நிலையை தி.மு.க. அரசு தொடருமானால் எடப்பாடியாரை நேரில் அழைத்து வந்து அவருடைய தலைமையில் எங்கள் ஐந்து மாவட்ட விவசாயிகளுடைய வாழ்வாதார ஜீவாதாரத்தை காப்பாற்றுவதற்கு ஜெயலலிதா வழியில் எந்த அறப்போராட்டத்திற்கும் அ.தி.மு.க. தயங்காது.

    தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தங்களை அடையாளப்படுத்தவும், தங்களுக்கு முகவரி தேடுவதற்காகவும் தேசத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஜெயலலிதாவை துணைக்கு அழைத்துக் கொள்வதில் உள்நோக்கமும், அரசியல் சூழ்ச்சியும் இருக்கிறது. இந்துத்துவா என்பது தனி விவாதமானது. அவர்கள் விவாதத்திற்கு அழைக்கிறார்கள். அதற்கு எடப்பாடியார் விரிவாக ஏற்கனவே கூறியிருக்கிறார். உங்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் தமிழகத்தில் எடுபடாது.

    அ.தி.மு.க.வை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை இன்றைக்கு புகழ்வது போல் புகழ்ந்து வஞ்சப்புகழ்ச்சி அணியாக உங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள துணைக்கு அழைப்பது போல் நீங்கள் பேசுவதை மக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள், பா.ஜ.க. தொண்டர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி சேவை செய்து வருகிறார். அதில் அண்ணாமலைக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம், அச்சம் வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×