search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்ப்பிணி மரணத்துக்கு அபாய சங்கிலி வேலை செய்யாததே காரணம்: உறவினர்கள் குற்றச்சாட்டு- ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு
    X

    கர்ப்பிணி மரணத்துக்கு அபாய சங்கிலி வேலை செய்யாததே காரணம்: உறவினர்கள் குற்றச்சாட்டு- ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

    • கஸ்தூரி தவறி கீழே விழுந்த உடன் உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
    • கஸ்தூரி பலியான இடம் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் வருவதால் திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    விருத்தாசலம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்கவும், அங்கு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

    அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரெயிலில் எஸ்-9 என்ற பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர்.

    இந்த ரெயில் நேற்று இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, கஸ்தூரிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டது. உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார்.

    அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பலியானார்.

    கஸ்தூரி தவறி கீழே விழுந்த உடன் உறவினர்கள், அந்த பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் ரெயில் நிற்கவில்லை. அப்போதுதான், அந்த அபாய சங்கிலி, வேலை செய்யாமல் செயல் இழந்து இருந்தது தெரிய வந்தது.

    உடனே உறவினர்கள் பக்கத்தில் உள்ள எஸ்-8 பெட்டிக்கு ஓடிச் சென்று, அங்குள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அதன் பிறகே ரெயில் நின்றுள்ளது. அதற்குள் அந்த ரெயில் கர்ப்பிணி விழுந்த இடத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விட்டது. உடனடியாக ரெயில் நின்றிருந்தால் கர்ப்பிணியை காப்பாற்றி இருக்கலாம் என்று கஸ்தூரியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதற்கிடையே கஸ்தூரி இறந்தது குறித்து விசாரணை நடத்த தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. கஸ்தூரி பலியான இடம் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் வருவதால் திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    மேலும் கஸ்தூரி பலியான ரெயில் தற்போது கொல்லம் சென்றடைந்து விட்டதால் அங்கு வைத்து அபாய சங்கிலி சரியாக வேலை செய்கிறதா? என்பது தொடர்பாக ஒவ்வொரு பெட்டியிலும் ரெயில்வே பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே கஸ்தூரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் அவரது இறப்பு குறித்து விசாரிக்க ஆர்.டி.ஓ.வுக்கு (கோட்டாட்சியர்) விருத்தாசலம் ரெயில்வே போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ. கண்ணன் விசாரணை நடத்த உள்ளார்.

    Next Story
    ×