search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சீட்டுக்காக இன்னொரு கட்சியுடன் கையேந்தும் நிலை: செல்வப்பெருந்தகை பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
    X

    சீட்டுக்காக இன்னொரு கட்சியுடன் கையேந்தும் நிலை: செல்வப்பெருந்தகை பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரும் ஒவ்வொருவரும் இது போன்று பேசுவது வாடிக்கைதான்.
    • மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து பேசி வருகிறார்.

    அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் 57 ஆண்டுகளாக நாம் ஏமாந்தது போதும். தேர்தல்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து, தொகுதிகளை பிரித்துக் கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும்" என்று பேசி இருந்தார். இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும். அதுவரை நாம் அமைதியாக இருக்க வேண்டும். எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என்று கையேந்தி நிற்பது?

    ஒரு காலத்தில் நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்து வந்தோம். அந்த நிலையை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என்று பேசி இருந்தார். ஆனாலும் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

    செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சு பற்றி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காமராஜர் விரும்பிய ஆட்சிதான் இப்போது நடக்கிறது. காமராஜர் எண்ணங்களை இந்த ஆட்சி நிறைவேற்றி வருகிறது.

    தி.மு.க. ஆட்சியில்தான் அவரது பெயரால் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே காமராஜர் விரும்பிய ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது. அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதை செய்து முடிக்கிற ஆட்சிதான் இப்போது நடக்கிறது.

    அவர் கல்விக்கு வித்திட்டார். அந்த கல்வியை ஆலமரமாக்குவதற்கு நம்முடைய முதலமைச்சர் எல்லா நடவடிக்கையையும் எடுத்துள்ளார். அரசு பள்ளியில் படித்த மாணவ செல்வங்கள் 100-க்கு 100 வாங்கும் நிலை இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் உருவாகி இருக்கிறது.

    எவ்வளவு காலம்தான் இன்னொரு கட்சியிடம் தொகுதி கேட்டு கையேந்துவது. அந்த நிலை மாற வேண்டும் என்று செல்வப்பெருந்தகை பேசி இருக்கிறார். அது அவரது ஆசை. அது நிறைவேறுமா? என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரும் ஒவ்வொருவரும் இது போன்று பேசுவது வாடிக்கைதான். ஆகவே செல்வப்பெருந்தகை அதே ஆசையில் கூறி இருக்கிறார். அவரது ஆசையை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது மக்கள் விருப்பம்தான். எனவே காங்கிரஸ் செல்வாக்கை மக்கள்தான் முடிவு செய்கிறார்கள்.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    இதற்கிடையே ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் இன்று பேசும்போது கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரையில் தொண்டர்களுக்கு மனவருத்தம் இருந்தாலும் கூட, மு.க.ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என சொல்வதில் சிறிதும் தயக்கம் கிடையாது.

    தேர்தலுக்கு முன் காமராஜர் ஆட்சி பற்றி நாம் பேசியிருக்க முடியாது. பேசவும் கூடாது. நல்ல வேளை தேர்தல் முடிந்த பின் பேசினோம். யார் நல்லாட்சி தந்தாலும் அது காமராஜர் ஆட்சிதான்.

    மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன். ஆட்சிக்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம்.

    காமராஜர் ஆட்சி என பெயர் வைக்கலாம். திராவிட மாடல் ஆட்சி என்றும் பெயர் வைக்கலாம். கக்கனின் நேர்மையையும் சொல்லலாம். நல்லாட்சி நடத்துகிறவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×