search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை- செல்லூர் ராஜூ
    X

    தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை- செல்லூர் ராஜூ

    • தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் வரும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
    • தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்க முடியும்.

    மதுரை:

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற விழாவில் பேசிய தொழிலதிபர் மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். பாரதிய ஜனதாவின் இந்த நிலைப்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இதனை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் பெருமை, கலாச்சாரம் ஆகியவற்றை பேணுவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இப்போது அதற்கு எதிர்மாறாக மத்திய அமைச்சர் நடந்துள்ளார். இது விரும்பத் தகாத சம்பவம் ஆகும்.

    வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வலிமையான ஒரு இயக்கமாக தேர்தலை சந்திக்கும். அ.தி.மு.க. மகா சமுத்திரம் போன்றது. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். வேறு யாரையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை. பாரதிய ஜனதாவை பொருத்தவரை அதன் மதவாதத்தை அ.தி.மு.க. ஒரு போதும் ஏற்கவில்லை. எங்களை பொறுத்தவரை கூட்டணி தேவையில்லை.

    தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே தி.மு.க.வின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. தி.மு.க. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் தொடர்ந்து மறுமுறை ஆட்சிக்கு வராது இதுதான் வரலாறு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விட பல மடங்கு திறமை கொண்டவராக எடப்பாடியாரை மக்கள் பார்க்கிறார்கள். எனவே வருகிற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும். மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.

    தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் வரும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்க முடியும். கூட்டணி ஆட்சி என்பது தமிழக மக்களால் விரும்பத்தகாத ஒன்றாகும். கூட்டணி ஆட்சி அமைந்த மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலைமை என்னவாக இருக்கிறது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்து தொழில் முதலீட்டை ஈர்த்து வந்துள்ளதாக கூறுகிறார். ஆனால் இதுவரை பல முதலமைச்சர்கள் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். இவர் மக்களின் வரிப்பணத்தில் ஜாலியாக சுற்றுலா சென்று வந்துள்ளார். மற்றபடி அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×