search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு? - மோடிக்கு சு.வெங்கடேசன் கேள்வி
    X

    திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு? - மோடிக்கு சு.வெங்கடேசன் கேள்வி

    • தியானத்தின்பொழுது இருக்க வேண்டிய சூழல் அமைதி. அது தமிழகத்தில் எப்பொழுதும் இருக்கும்.
    • நல்லவனுக்குப் பரிசாகவும் தீயவனுக்குத் தண்டனையாகவும் விளங்கும் ஆற்றல் நூல்களுக்கு உண்டு.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் எனவும், இது தேர்தல் பரப்புரை என்பதால் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள அனுமதி வழங்கக்கூடாது, பிரதமர் மோடி வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர்.

    இதுகுறித்து, குமரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவோ, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாலோ, கட்சி கூட்டம் நடத்தினாலோ தான் சம்பந்தப்பட்ட கட்சியினர் அனுமதி கோருவர். ஆனால் பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் யாரும் அனுமதி கோரவில்லை. நாங்களும் அனுமதி கொடுக்கவில்லை. அவரது வருகை தேர்தல் விதிமீறலுக்கு உட்பட்டது அல்ல என்றார்.

    இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் விவேகானந்தர் நினைவு மண்டப தியான மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், மதுரை பாராளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளரும், தற்போதைய எம்.பி.யுமான சு.வெங்கடேசன், எக்ஸ் தள பக்கத்தில், திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு? என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தியானம் செய்வதற்காகக் குமரி முனையில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு வந்துள்ளார். அவரது தனிப்பட்ட ஈடுபாட்டை கேள்விக்கு உட்படுத்துவது எமது நோக்கமன்று. விவேகானந்தர் பாறை உள்ள மண்டபத்தை அரசதிகாரத்தைச் சார்ந்த ஒருவர் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிப்படி தவறென்பது அனைவருக்கும் தெரியும், தேர்தல் ஆணையத்தைத் தவிர.

    தியானம் என்ற செயல் நேர்மை என்ற பண்பின் ஈடுபாட்டோடு தொடர்புடையது என்பதை சம்பந்தப்பட்டவர்களே நம்பாதபோது தேர்தல் ஆணையம் ஏன் நம்பவேண்டும்?

    தேர்தல் ஆணையத்தை நேர்மைப்படுத்துவதோ, நேர்மையாளர்களை மட்டுமே தியானம் செய்ய வைப்பதோ நம்முடைய வேலையல்ல. நாம் எழுப்ப நினைப்பது ஒரேயொரு கேள்வியை மட்டுந்தான்.

    தமிழகத்திற்கு தியானம் செய்ய வருவதற்கு முன்பு ஒடிசாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினார் மோடி. ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தினார். இப்பொழுது திருடர்களின் நிலத்தில் தியானம் செய்ய வந்துள்ளார்.

    தியானத்தின்பொழுது இருக்க வேண்டிய சூழல் அமைதி. அது தமிழகத்தில் எப்பொழுதும் இருக்கும். உத்தரபிரதேசத்தில் போய் எங்களை இழித்துப் பேசியதையும், ஒடிசாவில் போய் பழித்துப் பேசியதையும் ஒவ்வொரு தமிழரும் அறிவோம். எங்கோ நின்று பொல்லாங்கு பேசுதலுக்குத் தமிழ் இலக்கியம் சூட்டியுள்ள பெயர் "புறம் பேசுதல்".

    நீங்கள் அங்கு பேசியதை இங்கு பேசி உங்கள் நேர்மையை நிரூபியுங்கள் என்று கூட நாங்கள் கேட்கமாட்டோம். எந்த ஒரு மனிதரிடமும் அவரிடம் இல்லாத ஒன்றை கேட்பது நாகரீகம் அன்று என்பது எங்களுக்குத் தெரியும்.

    திருடர்களின் நிலத்திற்கு வந்துள்ள உங்களுக்கு உரிய எழுத்தாளர் சுரேந்திர மஹாந்தி எழுதிய " நீலமலை" என்கிற நூலைப் பரிசளிக்க விழைகிறோம். விவேகானந்தர் பாறையின் அமைதியான, தனித்த சூழலில் அந்நூலினைப் படிக்க முயலுங்கள்.

    சாகித்ய அகாதமி விருது பெற்று பாராளுமன்ற உறுப்பினரான சுரேந்திர மஹாந்தி எழுதிய நூலினை சாகித்ய அகாதமி விருதுபெற்று பாராளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசனாகிய நான் இதைப் பரிந்துரைப்பதாகக் கூட எடுத்துக் கொள்ளாதீர்கள்.

    நீங்கள் யாரைத் திருடர்கள் என்று கூறினீர்களோ அந்தக் கூட்டத்தின் சார்பாக, திருடு போனதாக நீங்கள் சொன்ன பொருள் பற்றிய பூர்வீக ஆவணம் ஒன்றை உங்களிடம் ஒப்படைக்கிறோம். ஆம், இந்த நூல் ஜெகந்நாதர் கோவிலையும் அதனுடைய பொக்கிஷத்தையும் பற்றியது.

    நல்லவனுக்குப் பரிசாகவும் தீயவனுக்குத் தண்டனையாகவும் விளங்கும் ஆற்றல் நூல்களுக்கு உண்டு. விவேகானந்தருக்கும் எங்களுக்கும் உடன்பாடுள்ள இந்தக் கருத்தில் உங்களுக்கும் உடன்பாடு இருக்குமாயின் இதனைப் படித்து பாருங்கள்.

    ஒடிசாவின் ஒவ்வொரு உயிரிலும் ஜெகந்நாதரின் ஈடுபாட்டுக்கென ஓர் இடம் உண்டு என்பதை முழுமுற்றாக நம்பும் ஒடிசாவின் மைந்தனான சுரேந்திர மஹாந்தியின் எழுத்தை வாசியுங்கள்.

    கங்கை முதல் கோதாவரி வரை பரந்து விரிந்த உத்கல சாம்ராஜ்யத்தின் நிரந்தர அதிபதியாக ஒடிசா மக்களால் காலமெல்லாம் போற்றப்படும் ஜெகந்நாதரின் பொக்கிஷ அறையின் சாவியை மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கூத்தப்பன்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஒருவரால் திருடப்பட்டதாகக் கூறுவது ஆன்மீகமா? அரசியலா? அல்லது அருவருப்பா?

    இதற்கும்மேல் பகவான் ஜெகந்நாதர் உங்களின் பக்தர் என்கிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள்.

    இரண்டு மாதங்கள் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழர்கள் திருடர்களாக்கப்பட்டார்கள். தெய்வங்கள் உங்களின் பக்தர்களாக்கப்பட்டார்கள். இப்பொழுது விவேகானந்தர் பாறைக்கு வந்திருக்கிறீர்கள். உங்களின் 45 மணி நேர தியானத்திற்கு பின் உங்கள் விசுவாசிகள் விவேகானந்தரை என்ன சொல்லப் போகிறார்களோ என்ற பதட்டம் தேசத்துக்கு ஏற்பட்டுள்ளது. பகவானே உங்களின் பக்தராக்கப்பட்ட பின் பரமஹம்சரின் எளிய சீடனுக்கு எந்த இடம் மிச்சமிருக்கப் போகிறது?

    இந்து பெண்களின் தாலியில் இருக்கும் தங்கத்தை எடுத்து இஸ்லாம் பெண்களுக்கு எதிர்கட்சிகள் கொடுத்துவிடுவார்கள் என்றும் இஸ்லாமியர்கள் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்பவர்கள், ஊடுருவல்காரர்கள் என்றெல்லாம் பேசிவிட்டுத்தான் தியான மேடைக்கு வந்திருக்கிறீர்கள். இங்கு வந்த உங்களிடம் சுரேந்திர மஹாந்தியின் நூலினை பரிந்துரைப்பதற்கு காரணம் உண்டு.

    ஜெகந்நாதரின் மரியாதையைக் காக்கும் பொருட்டு சொல்லவொண்ணாத் துயரத்தைச் சந்திக்கும் ஹாபிஸ் காதர் என்கிற இஸ்லாமிய அரசனின் போராட்டமே இந்நூல்.

    நீங்கள் எவ்வளவு வெறுப்பை விதைத்தாலும் இந்தியா மீளும் என்பதற்கு எங்களின் வேர்களே சான்று. நீங்கள் விஷத்தை தெளித்தாலும் விழுங்கி எழும் ஆற்றல் எம்மண்ணுக்கு உண்டு.

    எல்லா மார்க்கத்திலும் மனதை ஒருமுகப்படுத்தும் செயல்முறை உண்டு. மனதை ஒருமுகப்படுத்தலே தியானம். ஆனால் எதில் என்ற கேள்வியில்தான் ஆன்மீகமும் அரசியலும் அடங்கியுள்ளது. நீங்கள் செய்துமுடித்து வந்துள்ள தேர்தல் பிரசாரங்களின் வழியே உங்கள் மனமும் சிந்தனையும் என்னவாக உள்ளது என்பதை நாடறிந்துள்ளது.

    நீங்கள் பேசிய எல்லாவற்றிலிருந்தும் தேசத்தைத் திசை திருப்ப தியானம் பயன்படலாம் என்று நீங்கள் கருதுவீர்களானால் அதில் தோல்வியே அடைவீர்கள். தியாகமும் தியானமும் விளம்பரத்தின் பொருட்டு அமையுமேயானால் அச்செயலுக்கு விவேகானந்தர் சூட்டும் பட்டத்தை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

    "இதுவரை இருந்த பிரதமர்களிலே அப்பதவிக்கான தகுதியை மிகவும் தாழ்த்தியவர்" நீங்கள் என மன்மோகன்சிங் சொன்னதை மேலும் தாழ்த்த விவேகானந்தரைச் சான்றாக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.


    Next Story
    ×