search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரத்தில் கோவில் பணியாளர் தற்கொலை- அதிகாரிகள் டார்ச்சரால் இறந்ததாக சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ராமேசுவரத்தில் கோவில் பணியாளர் தற்கொலை- அதிகாரிகள் டார்ச்சரால் இறந்ததாக சக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • தற்கொலை செய்துகொண்ட நவீன்சத்ருவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராமேசுவரம் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கோவில் இணை ஆணைய சிவராம் குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ராமேசுவரம்:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ்-மனோ ரஞ்சிதம் தம்பதியின் மகன் நவீன்சத்ரு (வயது 36). இவர் கடந்த பிப்ரவரி மாதம் திருக்கோவில் பணிக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட 66 பணியாளர்களில் இவரும் ஒருவர் ஆவார். இதையடுத்து அவர் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் பணியாளராக சேர்ந்தார்.

    இவர் கடந்த பல மாதங்களாக கோவிலில் பணியாற்றி வந்தார். இவர் ராமேசுவரம் இரட்டை பிள்ளையார் கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே உயர் அதிகாரிகள் கோவிலின் விதிமுறைக்கு மாறாக கூடுதல் நேரம் பணி வாங்கியதாகவும், அதற்காக தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் பெரும் மன உளைச்சலில் இருந்ததாகவும் குடும்பத்தினரிடம் அடிக்கடி தெரிவித்து வந்துள்ளார்.

    தொடர்ந்து தனக்கு பணியில் நீடிக்க விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். இருந்தபோதிலும் அவரது குடும்பத்தினர் தைரியம் கூறி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் ராமேசுவரத்தில் நேற்று இரவு தான் தங்கியிருந்த வீட்டில் நவீன்சத்ரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.

    இதுதொடர்பாக தற்கொலை செய்துகொண்ட நவீன்சத்ருவின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராமேசுவரம் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கோவில் ஆய்வாளர் பிரபாகரன் பணியாளர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதை கண்டித்தும் அவருடைய டார்ச்சரால் இன்று ஒரு பணியாளர் இறந்துவிட்டார் என்றும் கூறினர்.

    மேலும் அவரை கைது செய்ய கோரி புதியதாக பணிக்கு சேர்ந்த பணியாளர்கள் ராமநாத சுவாமி முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ராமேசுவரம் தாசில்தார் அப்துல் ஜபார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி ஆகியோர் விரைந்து வந்து பணியாளர்களிடம் சமரசம் பேசி நடத்தி அவர்களை கோவில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு கோவில் இணை ஆணைய சிவராம் குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், பணியாளர்களின் பணிச்சுமைகளை ஆராய்ந்து சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதன் பின்னர் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.

    Next Story
    ×