search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    15 பேர் பலியான இடத்தில் பேய்கள் உலாவுவதாக கடும் பீதி- அச்சத்தில் பொதுமக்கள்
    X

    15 பேர் பலியான இடத்தில் "பேய்கள்" உலாவுவதாக கடும் பீதி- அச்சத்தில் பொதுமக்கள்

    • பேய் இருக்கா இல்லையா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.
    • 15 பேர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மா சுற்றி தருவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.

    செங்கம்:

    வேப்ப மர உச்சியில் நின்று பேய் ஒன்று ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க.... உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க என்ற பாடல் மூலம் அந்த காலத்திலேயே நமக்கு வீரத்தை ஊட்டினார்கள்.

    ஆனாலும் பேய் இருக்கா இல்லையா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.

    சமீப காலங்களில் பேய் படங்கள் மக்களை நம்ப வைக்கும் அளவிற்கு எடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. எந்தவிதமான விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் பேய் நடமாட்டம் என்ற பயம் மனிதனை ஆட்கொண்டே வருகிறது.

    திருவண்ணாமலை அருகே விபத்தில் 15 பேர் பரிதாபமாக இறந்த இடத்தில் பேய் நடமாடுவதாக மக்கள் வெளியே வராமல் முடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூரு செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே கடந்த 15-ந் தேதி மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கியது.

    அதில் பயணம் செய்த குழந்தை,பெண்கள் உட்பட 7 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.

    விபத்து நடந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பண்ணை செயல்படவில்லை.

    சாலையின் இருபுறமும் அடர்ந்த தைலம் மரங்கள் கருவேல மரங்கள், காட்டு மரங்கள் அதிகமாக உள்ளன. அதனால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 15 பேர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மா சுற்றி தருவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.

    மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதியில் திடீரென சுழல் காற்று வீசுகிறது. அலறல் சத்தம் கேட்கிறது. சாலையின் குறுக்கே வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் மர்ம உருவம் நடமாடுவது போல அமானுஷ்ய சக்திகள் நடமாட்டம் உள்ளது என அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.

    இதனால் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை கடந்து தான் குடிமகன்கள் டாஸ்மாக் கடைக்கு செல்ல வேண்டும்.

    மேலும் அதன் அருகே 3 தாபா ஓட்டல்கள் உள்ளன. தற்போது பேய் பீதியால் டாஸ்மாக் கடைகளும் தாபா ஓட்டல்களும் வெறிச்சோடி கிடக்கின்றன. பேய் பீதி குறித்து தெரியாத வெளியூர்காரர்கள் மட்டுமே டாஸ்மாக் கடைக்கும் வந்து செல்கின்றனர்.

    இந்த பேய் பீதி நாளுக்கு நாள் அங்குள்ள மக்களை முடங்க செய்து வருகிறது. இதனால் வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டுகின்றனர். 6 மணிக்கே வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிடுகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அப்பகுதி படித்த இளைஞர்கள் நகைச்சுவையாக கூறி சிரிக்கின்றனர்.

    திருவண்ணாமலை பெங்களூரு சாலையில் விபத்து நடந்த பகுதியில் அடர்ந்த காட்டு மரங்கள் உள்ளன. இங்கு வனப் பறவைகள் அதிக அளவில் உள்ளது.

    மேலும் நாய்கள் அதிக அளவில் சுற்றிதிரிகின்றன. 6 மணிக்கு மேல் மரங்களில் இருந்து பறவைகள் அதிக அளவில் சத்தம் எழுப்புகின்றன. ஒரு சில பறவைகளின் சத்தம் அலறல் சத்தம் போல இருக்கிறது.

    மேலும் காற்றில் மரங்கள் அசைவது பயந்தவர்களுக்கு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது மாலை 5.30 மணிக்கு மேல் கடும் குளிர் வாட்டத் தொடங்கியுள்ளது. பனிமூட்டமும் உள்ளது. நாய்கள் அதிக அளவில் அங்கு நின்று கொண்டு குறைத்தபடி ஊளை இடுகின்றன.

    இது ஒருவேளை அச்சத்தை ஏற்படுத்தலாம். வாகனங்களில் செல்லும்போது அதில் உள்ள வெளிச்சம் மரங்களில் பட்டு அந்த நிழல் சாலையின் குறுக்கே மர்ம உருவம் போவது போல தெரியும். இதனால் அச்சமடைந்து வருகின்றனர். மற்றபடி ஆவி நடமாட்டம் உள்ளது என்பதை இந்த நவீன காலத்தில் நம்ப முடியாது.

    சம்பவ இடத்தில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதியில் அதிக அளவு மின்விளக்குகளை பொருத்த வேண்டும். சாலையின் நடுவில் ஒளிரும் விளக்குகளை பொருத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×