search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாலிபர் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்
    X

    டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட காரின் கண்ணாடி உடைந்திருக்கும் காட்சி- காயம் அடைந்த நவீன்குமார்

    வாலிபர் மீது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு: ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்

    • காயமடைந்த நவீன்குமாரை உடனடியாக மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிச் சென்ற 4 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது30). இவர் வெளிநாடுகளுக்கு அவ்வப்போது வேலைக்கு சென்று வருவது வழக்கம். உள்ளூரிலும் பல்வேறு வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் கீழவளவு பஸ் நிறுத்தம் அருகே தனது நண்பர் ஒருவரின் காரில் நவீன்குமார் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். பேருந்து நிறுத்தம் என்பதால் அருகில் செயல்படும் ஆட்டோ ஸ்டாண்ட் கண்ணன் என்பவர் தனது ஆட்டோவுடன் நின்றிருந்தார். நவீன்குமார் அமர்ந்திருந்த கார், பஸ் நிறுத்தம் அருகே உள்ள சத்தியமூர்த்தி (40) என்பவரின் ஜெராக்ஸ் கடை முன்பாக நின்றிருந்தது.

    இரவு 9 மணி என்பதால் கடையை அடைக்கும் பணியில் சத்தியமூர்த்தி ஈடுபட்ட படி கடை வாசலில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து நவீன்குமார் அமர்ந்திருந்த கார் அருகே வந்து நிறுத்தப்பட்டது. அந்த காரில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் நவீன் குமாரை நோக்கி டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசியது.

    இதை சற்றும் எதிர்பாராத நவீன்குமார் நிலை தடுமாறினார். டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் காரின் கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கின. இந்த சம்பவத்தில் நவீன்குமார் படுகாயமடைந்தார். டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்ததில் அருகில் நின்றிருந்த ஆட்டோ டிரைவர் கண்ணனும் காயமடைந்தார்.

    அதேபோல் ஜெராக்ஸ் கடை வாசலில் நின்றிருந்த உரிமையாளர் சத்திய மூர்த்திக்கும் காயம் ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது கடைகளை அடைத்துவிட்டு சென்றனர். சிலர் மட்டுமே சம்பவம் நடந்த இடத்தில் கூடினர். இதற்கிடையே டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசிய கும்பல் தாங்கள் வந்த காரில் தப்பி சென்றனர். இதையடுத்து அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

    தகவலறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு மற்றும் கீழவளவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். அங்கு திரண்டிருந்த கூட்டத்தை கலைந்து செல்ல செய்தனர். காயமடைந்த நவீன்குமாரை உடனடியாக மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த ஆட்டோ டிரைவர் கண்ணன், ஜெராக்ஸ் கடை உரிமையாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் பணியாற்றியபோது நவீன்குமாருக்கு மற்றொரு கும்பலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக இந்த விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகை காரணமாக நவீன்குமாரை கொலை செய்வதற்காக டிபன் பாக்ஸ் வெடிகுண்டை கும்பல் வீசி சென்றிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிச் சென்ற 4 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிறுத்தம் அருகே சினிமா பாணியில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசி சென்ற சம்பவம் கீழவளவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×