search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    TN Govt
    X

    இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது- தமிழக அரசு தகவல்

    • 15 விளையாட்டுகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை 52 கோடி ரூபாய் செலவில் கடந்த 2023-ம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.
    • 2024 -ம் ஆண்டில், தமிழ்நாடு என்.சி.சி. இயக்குநரகம் ஒட்டுமொத்த மூன்றாவது இடத்தைப் பெற்றுப் புகழ் ஈட்டியது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல துறைகள் இந்திய அளவில் முதன்மையாகவும், முன்னணியாகவும் திகழ்கின்றன. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பான நல்ல பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக, இன்று விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு இந்தியத் திருநாடு மட்டுமின்றி, உலகெங்கிலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளும் உற்று நோக்குவதோடு, பாராட்டுகளையும் தெரிவிக்கிறது.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அர்ப்பணிப்பு உணர்வுகளால், விளையாட்டுத் துறையில் வியக்கத்தகுந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அவரால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் மூலம் பதக்கங்களை வாரிக் குவித்துத் தமிழ்நாட்டுக்குப் பெருமைகளைத் தேடித் தந்துள்ளார்.

    முதலமைச்சர் இத்துறையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறைக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உத்தரவிட்டு உள்ளார்கள். இதன் பயனாக, சென்னையில் உலகத் தரத்திற்கு இணையான நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் நவீன வசதிகளும் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    ஏறத்தாழ 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலும், சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடிய வகையிலும் சென்னையில் அமையப்பெற்றுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் 9 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலான நேரு உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளோடு புதிய செயற்கை இழை தடகளப் பாதை, எல்.ஈ.டி மின்னொளி வசதிகள் நிறுவுதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் ரூபாய் 60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நவீன விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கங்கள் அனைத்திலும் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள் அமைத்திட அதற்கான அறிவிப்பினை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

    பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாக முதற்கட்டமாக, 10 சட்டமன்றத் தொகுதிகளில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் தலா 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் சென்னையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல போட்டிகள் திறம்பட நடத்தப்பட்டு ஒன்றிய அரசின் சார்பிலும், பன்னாட்டு அளவிலும் பாராட்டுகளைப் பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்த விளையாட்டுத் துறையினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற வகையில், சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்திடத் திட்டமிடப்பட்டு, அதற்குரிய பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய திட்டமிடல் காரணமாக தமிழ்நாடு அரசும் இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏறத்தாழ 114 கோடி ரூபாய்ச் செலவில், உலகப்புகழ்பெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை மாமல்லபுரத்தில் ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகின் 186 நாடுகளை சார்ந்த

    2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வேறு எந்த நாட்டிலும் காணாத வகையில் தமிழக அரசின் விருந்தோம்பலை கண்டு வியந்து போற்றிய வரலாறு தமிழ்நாட்டில் தடம் பதித்தது.

    சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஏ.டி.பி. சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி, சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் போட்டி, ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி, சர்வதேச அலை சறுக்குப் போட்டி, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. 15 விளையாட்டுகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை 52 கோடி ரூபாய் செலவில் கடந்த 2023-ம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.

    ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின முகாமில், தமிழ்நாடு இயக்குநரகம் ஒட்டு மொத்தமாக இரண்டாவது இடத்தைப் பெற்றது. மேலும் இந்நிகழ்வில் 6 பிரிவுகளில் தமிழ்நாடு என்.சி.சி இயக்குநரகம் "சிறந்த என்.சி.சி இயக்குநரகம்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

    2024 -ம் ஆண்டில், தமிழ்நாடு என்.சி.சி. இயக்குநரகம் ஒட்டுமொத்த மூன்றாவது இடத்தைப் பெற்றுப் புகழ் ஈட்டியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இத்தகைய மகத்தான எண்ணற்ற விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உருவாகி வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×