search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
    X

    5 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

    • சுங்கக் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
    • வெளிவட்ட சாலையில் உள்ள 4 சுங்கச் சாவடிகளிலும் இந்த ஆண்டு 2-வது முறையாக கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 6 கிலோ மீட்டர் தூரம் வெளிவட்ட சாலை ரூ.2,156 கோடி செலவில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த சாலையில் 4 இடங்களில் கடந்த ஜனவரி முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள சுங்கச் சாவடிகள் என மொத்தம் 5 இடங்களில் சுங்கக் கட்டணம் இன்று முதல் (1-ந்தேதி) உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவித்து இருந்தது.

    அதன்படி சுங்கக் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. மீஞ்சூர்- வண்டலூர் வெளி வட்ட சாலையில் உள்ள வரதராஜபுரம், கோலப் பன்சேரி, நெமிலிச்சேரி, சின்ன முல்லைவாயில் மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் ஆகிய 5 சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    இதில் ஒருவழி பயணத்துக்கு ரூ.18 முதல் ரூ. 323 வரையும் மாதம் முழுவதும் பயணம் செய்ய ரூ.2,923 முதல் ரூ. 18 ஆயிரத்து 80 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வெளிவட்ட சாலையில் ஒருமுறை சென்று வர கார்களுக்கு ரூ.18 முதல் ரூ.50 வரையும் (பழைய கட்டணம் ரூ.17-ரூ.47), இலகு ரக வாகனங்களுக்கு ரூ.30 முதல் ரூ.81 வரையும் (பழைய கட்டணம் ரூ.28-ரூ.75) பஸ்களுக்கு ரூ.62 முதல் 169 வரையும் (பழைய கட்டணம் ரூ.58-ரூ.158) கனரக வாகனங்களுக்கு ரூ.119 முதல் ரூ.323 வரையும் (பழைய கட்டணம் ரூ.111-ரூ.301) கட்டணமாக உள்ளது.

    கோலப்பன்சேரி சுங்கச் சாவடியில் சென்று வர ரூ.21 முதல் ரூ.115 வரையும் மாதம் முழுவதும் பயணம் செய்ய ரூ.1225 முதல் ரு.7913 ஆகவும் கட்டணம் உள்ளது.

    சின்ன முல்லை வாயில் சுங்கச்சாவடியில் சென்றுவர ரூ.18 முதல் ரூ.119 வரையும் மாதம் முழுவதும் பயணிக்க ரூ.1080 முதல் ரூ.6976 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நெமிலிச்சேரி சுங்கச்சாவடியில் சென்று வர ரூ.27 முதல் 173 வரையும் மாதம் முழுவதும் பயணம் செய்ய ரூ.1577 முதல் ரூ.10 ஆயிரத்து 192 ஆகவும் கட்டணம் நிர்ணயித்து உள்ளனர்.

    வெளிவட்ட சாலையில் உள்ள 4 சுங்கச் சாவடிகளிலும் இந்த ஆண்டு 2-வது முறையாக கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    ஏற்கனவே பெட்ரோல், டீசல் உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் 1-ந் தேதியே கட்டணம் திருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் உள்ள 4 சுங்கச்சா வடிகளிலும் கடந்த ஜனவரி 5-ந் தேதி தான் சுங்கக் கட்டணம் வசூல் தொடங்கியது. சட்டவிதிகளின் படி 6 மாதங்களுக்கு கட்டணத்தை மாற்றி அமைக்க முடியாது. எனவே தற்போது கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஏப்ரல் 1-ந் தேதி திருத்தப்பட்ட கட்டணம் அறிவிக்கப்படும் என்றார்.

    ஆவடியை சேர்ந்த டிரைவர் ஓருவர் கூறும்போது, 'பட்டாபிராமில் பாலம் கட்டும் பணியால் தண்டரை வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே மாற்றுப் பாதையில் செல்வதால் கூடுதலாக பெட்ரோல், டீசல் வீணாகிறது. இனி, சுங்கச்சாவடிக்கு அதிக செலவு செய்ய வேண்டும்' என்றார்.

    Next Story
    ×