search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தேனி மாவட்டத்தில் தொடரும் கனமழை: 66 அடியை கடந்த  வைகை அணை நீர்மட்டம்
    X

    66 அடியை எட்டியுள்ளதால் கடல் போல் காட்சியளிக்கும் வைகை அணை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தேனி மாவட்டத்தில் தொடரும் கனமழை: 66 அடியை கடந்த வைகை அணை நீர்மட்டம்

    • தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
    • அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 47 அடியாக குறைந்திருந்தது. அதனைதொடர்ந்து அரசரடி, வெள்ளிமலை, கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேலும் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேலும் கனமழை தொடர்ந்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 3177 கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை மேலும் உயர்ந்து 6458 கனஅடி நீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 66.31 அடியாக உயர்ந்துள்ளது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கு அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

    ஆனால் திடீர் கனமழையால் அணையின் நீர்மட்டம் 66 அடியை கடந்ததால் முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 68 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், அதனைதொடர்ந்து 69 அடியை எட்டியவுடன் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறக்கப்படும்.

    தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றை கடக்கவோ முயற்சிக்க கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 125.50 அடியாக உள்ளது. அணைக்கு 1616 கனஅடிநீர் வருகிறது. தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் முல்லைபெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 105 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.93 அடியாக உள்ளது. வருகிற 462 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    பெரியாறு 12, தேக்கடி 4.6, கூடலூர் 1.8, உத்தமபாளையம் 26.6, சண்முகாநதி அணை 14.2, போடி 100.2, வைகை அணை 8, மஞ்சளாறு 27, சோத்துப்பாறை 51, பெரியகுளம் 55, வீரபாண்டி 107, ஆண்டிபட்டி 15.6, அரண்மனைப்புதூர் 37.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×