என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
- மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.
அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்காக தயார் செய்யப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 44 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருக்கிறது.
தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சக்கர நாற்காலி, மூத்த குடிமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவுக்கு தலா ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொகுதி முழுவதுமாக 552 வாக்குப்பதிவு எந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் கருவிகள் (வி.வி.பேட்) 276-ம் பயன்படுத்தப்படுகின்றன.
தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,355 பேர் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று அவர்கள் பணிபுரிய உள்ள இடங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி, கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்தார்.
மதியம் 2 மணிக்கு விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து, வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்ட வேன்களில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். அப்போது வாக்குச்சாவடிக்கு தேவையான 66 பொருட்கள் அடங்கிய பையையும் உடன் எடுத்து சென்றார்கள்.
இந்த வாகனங்களில் ஏற்கனவே ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால் அந்த கருவியின் மூலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக வாக்குச்சாவடிகளுக்கு சென்றடைந்ததா? என்பதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தனர்.
வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர 110 வாக்குச்சாவடிகளில் வெளிப்பகுதியிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நரேந்திரன்நாயர் மேற்பார்வையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் தலைமையில் மத்திய துணை ராணுவப்படையினர் 220 பேர் உள்பட 2,651 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவுக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாட்டை உறுதி செய்திட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 6.30 மணி வரை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 13-ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்