என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கடந்த 6 நாட்களாக இருளில் தவிக்கும் கிராமங்கள்
- பல கிராமங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் சூழ்ந்து நிற்கிறது.
- குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
ஸ்ரீவைகுண்டம்:
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. தாமிரபரணி ஆற்றில் இன்னும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் வெளியேறிய தண்ணீரால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இன்னும் இந்த பாதிப்பில் இருந்து முழுவதும் மீள முடியவில்லை.
பல கிராமங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் சூழ்ந்து நிற்கிறது. குளங்களில் இருந்து வெளியேறிய தண்ணீர் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான இடங்களில் தேங்கி நிற்பதால் அதனை அகற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் மின்சார வினியோகம் சீராக வில்லை. இதனால் கடந்த 6 நாட்களாக கிராம மக்கள் இருளில் தவித்து வருகிறார்கள்.
வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களில் இன்னும் சில பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளும், மீட்பு குழுவினரும் செல்ல முடியாத நிலையே நீடித்து வருகிறது.
இதற்கிடையே தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆழ்வார் திருநகரியில் ஆற்றின் நடுவில் இருந்த உயர்அழுத்த மின்கம்பத்தை தண்ணீர் வாரி சுருட்டி சாய்த்தது. அந்த மின்கம்பத்தை மூழ்கடித்து தண்ணீர் சீறி பாய்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் அருகில் உள்ள ஆழ்வார்தோப்பு, கீழ ஆழ்வார் தோப்பு, சிவராம மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மழை நின்று 5 நாட்கள் ஆகியும் இன்னும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறையவில்லை. இதனால் கடந்த 6 நாட்களாக கிராம மக்கள் தொடர்ந்து மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகிறார்கள். மின்சாதன பொருட்கள், மின்மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
ஏற்கனவே செல்போன் நெட்வொர்க் இன்னும் சீராக இல்லாததால் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாமலும், வெளி உலக தொடர்பு இல்லாமலும் கிராமம் தனித் தீவாக மாறிவிட்டன. அவர்களால் அடிப்படை வசதிகள், நிவாரண பணிகள் மற்றும் தேவைகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்க கூட முடியாத சூழ்நிலை உள்ளது.
ஆழ்வார்தோப்பு கிராமத்தில் வசிக்கும் மக்கள் அங்குள்ள கோவிலில் இருக்கும் ஒரே ஒரு ஜெனரேட்டரை இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இயக்கி அதில் செல்போன்களை சார்ஜ் செய்து வருகின்றனர். மற்றபடி எந்த தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் தினமும் இருளில் தவிக்கும் நிலையே நீடித்து வருகிறது. கிராமங்களை சுற்றி காடுகளில் இருந்த பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் மழை வெள்ளத்தின் காரணமாக வீடுகளுக்கு படையெடுத்து வருவதால் இரவில் அச்சத்துடன் இருக்கும் நிலையும் உள்ளது. இதனால் சிறுவர்கள், வயதானவர்கள் பயத்துடன் ஒவ்வொருநாள் இரவையும் கழித்து வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் முழுவதும் குறைய 15 நாட்களுக்கு மேலாகும் என்று தெரிகிறது. எனவே கிராமங்களுக்கு மின் சப்ளை வழங்க அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த 1992-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது தாமிரபரணி ஆற்றின் நடுவே இருந்த அந்த மின்கம்பம் சரிந்து இருந்தது. இதன் பின்னர் அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அடுத்து வந்த ஆண்டுகளில் பெரிய அளவில் ஆற்றில் வெள்ளம் ஏற்படாததால் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலை இருந்தது.
இந்த நிலையில் தற்போது ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மின்கம்பம் இருந்த இடமே தெரியாத அளவுக்கு தண்ணீரில் மூழ்கி உள்ளது. ஆழ்வார் திருநகரி-ஆழ்வார் தோப்பு இடையே புதிய மேம்பாலம் தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தை ஒட்டி பாதுகாப்பான முறையில் மின்கம்பம் அமைத்து மின்சப்ளை வேண்டும் அல்லது மாற்று வழியில் தற்காலிகமாக மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் உரிய ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, தாமிரபரணி ஆற்றின் நடுவே இருந்த மின் கம்பம் மூழ்கி உள்ளதால் கிராமம் முழுவதும் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 6 நாட்களாக இரவில் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறோம். கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரிகள் மாற்று வழி ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். இன்னும் எத்தனை நாட்கள் இதே போல் மின்சாரம் இல்லாமல் இருளில் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நாங்கள் தெரிவித்து உள்ளோம். ஆனால் தற்போது வரை எந்த உறுதியும் அவர்கள் கொடுக்கவில்லை. மின் இணைப்பு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். மாவட்ட நிர்வாகமும், மின்வாரிய அதிகாரிகளும் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்