search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை
    X

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை

    • சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையிலும், ஜெயலட்சுமி மதுரையிலும் இருந்ததால் இருவருக்குமான தொடர்பில் இடைவெளி அதிகரித்தது.
    • இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சாத்தூர்:

    மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (37) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜெயலட்சுமி மதுரை ரெயில்வேயில் போலீசாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு பவித்ரா (11) என்ற மகளும், காளிமுத்து (9) என்ற மகனும் இருந்தனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருந்தபோதிலும் பிள்ளைகள் இருவரும் தாய் ஜெயலட்சுமியின் பராமரிப்பில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஜெயலட்சுமி திருச்சி ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் திருச்சிக்கு செல்வதில் விருப்பமின்றி இருந்துள்ளார். தனது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எதுவும் நடக்கவில்லை. இதனால் ஜெயலட்சுமி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    இதற்கிடையே நேற்று மாலை ஜெயலட்சுமி தனது மகள், மகனை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் அவர் நேராக அந்த பகுதியில் உள்ள தேனூர் தண்டவாள பகுதிக்கு சென்றார். திடீரென்று அந்த வழியாக மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற இண்டர்சிட்டி ரெயில் முன்பு குழந்தைகளின் கைகளை பிடித்துக்கொண்டு பாய்ந்தார். ரெயில் மோதிய வேகத்தில் 3 பேரின் உடல்களும் துண்டு, துண்டாக சிதறியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    மதுரையில் ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக வேலை பார்த்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சொக்கலிங்க பாண்டியன் (47) என்பவருடன், ரெயில்வே போலீசாக வேலை பார்த்த ஜெயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்த சுப்புராஜூக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் சுப்புராஜ், ஜெயலட்சுமி தம்பதியினர் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    அதேபோல் மதுரையில் ரெயில்வே பாதுகாப்பு படையில் இருந்த சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டைக்கு மாறுதலாகி சென்றார். ஆனாலும் ஜெயலட்சுமியுடன் வைத்திருந்த கள்ளக்காதலை அவர் கைவிடவில்லை. 6 ஆண்டுகளாக அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. சொக்கலிங்க பாண்டியனுக்கும் திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் கல்லூரி படிப்பு படித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சொக்கலிங்க பாண்டியன் அடிக்கடி பெண்களுடன் செல்போனில் பேசி வருவதாக கூறி அவரது மனைவியும் தகராறில் ஈடுபட்டு விவகாரத்து பெற்று சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனியாக இருந்த சொக்கலிங்க பாண்டியன் ஜெயலட்சுமியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சொக்கலிங்க பாண்டியன் திடீரென தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையிலும், ஜெயலட்சுமி மதுரையிலும் இருந்ததால் இருவருக்குமான தொடர்பில் இடைவெளி அதிகரித்தது.

    இதனால் சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அறிந்த ஜெயலட்சுமி சொக்கலிங்க பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இருவரும் அடிக்கடி செல்போனில் வாக்குவாதம் செய்த நிலையில் நேற்று முன்தினம் சொக்கலிங்க பாண்டியன் மதுரை திருப்பாலையில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்ததில் இருவருக்கும் கைகலப்பாகி உள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட சண்டையை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதன் மூலம் அவர்களது கள்ளக்காதல் விவகாரம் ஊருக்கே தெரிந்து வெட்ட வெளிச்சமானது. கணவரை பிரிந்ததாலும், தனது கள்ளக்காதலன் ஏமாற்றியதாலும் சம்பவத்தை அவமானமாக கருதிய ஜெயலட்சுமி இனி இந்த உலகத்தில் வாழக்கூடாது என தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நேற்று மாலை ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜெயலட்சுமி தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த சொக்கலிங்க பாண்டியன் போலீஸ் விசாரணைக்கு பயந்து நேற்று இரவு கோவில்பட்டியில் இருந்து கார் மூலமாக சாத்தூர் சென்றுள்ளார். சாத்தூர்-நல்லி ஊருக்கு இடையே உள்ள சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்தில் சொக்கலிங்க பாண்டியன் தலை துண்டித்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

    உடலை கைப்பற்றிய தூத்துக்குடி ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சொக்கலிங்க பாண்டியன் உடலை அனுப்பி வைத்தனர். இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×