search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
    X

    தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    • அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
    • தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாள் புறப்பாடு ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு பெரிய கோவிலில் இருந்து தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டு மேலவீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர்.

    பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. கலெக்டர் தீபக்ஜேக்கப், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், ஆணையர் மகேஸ்வரி, பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    பின்னர், தேருக்கு முன்பாக, விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர்- கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடியபடி சென்றது.

    இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஆரூரா, தியாகேசா' என்ற பக்தி முழக்கத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்து சென்றனர். பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணை முட்டியது.

    தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை பாடியபடி சென்றனர். மேலும் சிவவாத்தியங்களும் இசைக்கப்பட்டன. கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் தேருக்கு முன்னாள் நடத்தப்பட்டன.

    நான்கு ராஜ வீதிகள் வழியாக தேர் அசைந்தாடியபடி சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து அர்ச்சனை செய்தனர். இன்று பிற்பகலில் தேர் நிலையை வந்து அடையும்.

    பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் நீர் மோர் பந்தல்கள் அமைத்திருந்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இந்த தேர் திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, சதய விழாக்குழு தலைவர் து.செல்வம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×