search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை- கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை- கனிமொழி எம்.பி. பேச்சு

    • மக்களுக்காக, மொழிக்காக தி.மு.க. பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ளது.
    • தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வருகை புரிந்த தூத்துக்குடி எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழிக்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் பாவூர்சத்திரத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து கூட்டத்தில் கலந்துக்கொண்ட கனிமொழி எம்.பி. தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களாக பாய், போர்வை, சேலை, அரிசி, பாத்திரம் உள்ளிட்ட பொருட்களையும், பொதுக்கூட்ட மைதானத்தில் மகளிரணியுடன் இணைந்து 100 கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் திட்டங்கள் தாங்கிய கட்சி கொடிகளை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களுக்காக, மொழிக்காக தி.மு.க. பல்வேறு போரா ட்டங்களை சந்தித்துள்ளது. இந்தி மொழியை திணிக்க கூடாது. மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்கள் மீது திடீரென அக்கறை உள்ளது போல பா.ஜ.க.வினர் திருக்குறள் பற்றி பேசுகின்றனர். கவர்னர் தத்துவம் சொல்கிறார்.

    சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிப்பு பகுதியை மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்கள். மத்திய அரசு ஒரு பைசா நிதி கூட தமிழகத்திற்கு தரவில்லை.

    கோவிலை வைத்து அரசியல் செய்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை மக்கள் மாற்ற வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கும். தமிழக உரிமைகள், மொழி பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×