search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களை நினைவு கூர்ந்து வீர வணக்கம் செலுத்துவோம்- ராமதாஸ்
    X

    தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களை நினைவு கூர்ந்து வீர வணக்கம் செலுத்துவோம்- ராமதாஸ்

    • தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர்.
    • நீண்ட பயணத்திற்குப் பிறகு இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில்,

    நாளை செப்டம்பர் 11...

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாள்!

    அதை நினைக்கும்போது எனது மனதில் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன.

    தியாகி இமானுவேல் சேகரனார் போற்றுதலுக்கு உரியவர்.

    ஆங்கிலம், இந்தி, ரஷிய மொழி உள்ளிட்ட 7 மொழிகளை கற்றறிந்தவர்.

    தேவேந்திரர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தீண்டாமையை எதிர்த்தவர். இவ்வளவு சிறப்பு மிக்க இவரது நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய நிகழ்வுகள் எதுவும் இல்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை.

    அந்த நிலையை மாற்றி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது இந்த இராமதாசு தான். அதன்பிறகு தான் அங்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் செல்லத் தொடங்கினார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய சில மாதங்களில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக மதுரை அனுப்பானடியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற என்னிடம் சிலர் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று வரலாம் என்று கூறினார்கள். ஆனால், அங்கு செல்வது சரியானதல்ல என்று வேறு சிலர் கூறினார்கள். ஆனால், இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று வருவது என்று தீர்மானித்து விட்டேன். கூட்டம் முடிந்ததும் கட்சி நிர்வாகிகளுடன் இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு பயணித்தேன்.

    நானும், பா.ம.க. நிர்வாகிகளும் பரமக்குடி சென்றடைவதற்கு முன்பாகவே அங்குள்ள 5 முனை சாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு விட்டனர். மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு இது குறித்து தகவல் தெரியும் என்பதால் அவர்கள் தங்களின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து ஆட்களைக் கூட்டி விட்டனர். பரமக்குடியில் கூடி நின்றவர்களில் ஒரு பிரிவினர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அங்கிருந்தவர்களில் பலர் என் மகிழுந்தின் கார் மீது ஏறிக் கொண்டனர். எங்கள் மகிழுந்துகளைத் தொடர்ந்து ஏராளமான தானிகளிலும் பலர் அணிவகுத்து வந்தனர். அதனால் எங்களின் பயணம் அறிவிக்கப்படாத ஊர்வலமாகவே மாறி விட்டது.

    நீண்ட பயணத்திற்குப் பிறகு இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு சென்று பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி. ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அந்த மாவீரனின் நினைவிடம் பராமரிப்பின்றி கிடந்தது. அந்த இடத்தை நெருங்க முடியாதவாறு ஒரே துர்நாற்றம் வீசியது. கழிவு நீர் தேங்கிக் கிடந்தது. அந்த இடத்தில் பன்றிகளின் கழிவுகள் தான் நிரம்பிக் கிடந்தன. இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த எனது கண்களில் நினைவிடத்தின் அவலநிலையைக் கண்டு கண்ணீர் கசிந்தது.

    அந்த இடத்திலேயே இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக எனது சொந்தப் பணம் ரூ. 15 லட்சத்தை மதுரையைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி ஒருவரிடம் கொடுத்து நினைவிடத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். அந்த நிர்வாகியை பின்னாளில் வட தமிழகத்தில் உள்ள வந்தவாசி சட்டப்பேரவைத் தேர்தலில் நிறுத்தி, தேர்தலுக்கான செலவை முழுவதும் கட்சி சார்பில் செய்து அவரை சட்டப்பேரவை உறுப்பினராக்கி அழகு பார்த்தேன்.

    எனது சொந்தப் பணத்தில் இமானுவேல் சேகரனாரின் நினைவிடம் தூய்மைப்படுத்தப்பட்டு, கிரானைட் கற்கள் பொருத்தப்பட்டு அழகூட்டப்பட்டது. அதன்பின்னர் அடுத்து வந்த அவரது நினைவிடத்திற்கு சென்று நான் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்தினேன். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று ஆணையிட்டேன். அதன்பிறகு தான் அவரது நினைவிடத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள். இமானுவேல் சேகரனார் 1957-ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். அதன்பின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் அஞ்சலி செலுத்தியதில்லை. அவரது நினைவிடத்தை நான் சீரமைத்து, மரியாதை செலுத்திய பிறகு தான் அங்கு மற்ற தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள்.

    இதற்கெல்லாம் முன்பாகவே 29.02.1988-ஆம் நாள் புதுச்சேரியில் நடைபெற்ற வன்னியர் சங்கத்தின் மத்தியக் குழுக் கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை இமானுவேல் தேவேந்திரர் மாவட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி 17&ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் வன்னியர் சங்கம் சார்பிலும், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் நடத்தப்பட்ட அனைத்துக் கடிதத் தொடர்புகளிலும் இராமநாதபுரம் மாவட்டம் இமானுவேல் தேவேந்திரர் மாவட்டம் மாவட்டம் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது நினைவுகூரத் தக்கதாகும்.

    இந்த நினைவுகளுடன் தியாகி இமானுவேல் சேகரனாரின் 67-ஆம் நினைவு நாளில் அவருக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர் கண்ட கனவுப்படியே தேவேந்திரகுல வேளாளர்களின் முழுமையான விடுதலைக்காக போராட அனைவரும் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×