search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பதி திருக்குடை ஊர்வலம்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்
    X

    திருப்பதி திருக்குடை ஊர்வலம்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்

    • புரட்டாசி மாதம் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஊர்வலத்தில் 21 அழகிய திருக்குடைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று சமர்ப்பிப்பது வழக்கம்.
    • திருக்குடை ஊர்வலம் வருகிற 13-ந்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலமாக புறப்படுகிறது.

    அம்பத்தூர்:

    அயனாவரம் திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளையும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஊர்வலத்தில் 21 அழகிய திருக்குடைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று சமர்ப்பிப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் சிறப்பு பூஜைகளுடன் 21 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த திருக்குடை ஊர்வலம் வருகிற 13-ந்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலமாக புறப்படுகிறது. ஊர்வலத்துக்கு மாநில விஷ்வ இந்து பரிஷத் தலைவர் முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை தாங்குகிறார். திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி.ராமலிங்கம் வரவேற்கிறார்.

    விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத வழக்கறிஞர் பிரிவு சு.சீனிவாசன் முன்னிலை வகிக்கிறார். திருக்குடை ஊர்வலத்தை அகில பாரத சன்னியாசிகள் சங்க அறங்காவலர் சுவாமி ஈஸ்வரானந்தா ஆசியுரையுடன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் அறங்காவலர்கள் தணிகை வேல், எஸ். சீனிவாசன் உட்பட திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    திருக்குடை ஊர்வலமானது என்.எஸ்.சி.போஸ் ரோடு, வால்டாக்ஸ் ரோடு, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா ரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, ஸ்டாரன்ஸ் ரோடு, கொன்னூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்று இரவு அயனாவரத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம் சிவசக்தி சத்சங் மண்டபத்தில் தங்குகிறது.

    Next Story
    ×