search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: கடந்து வந்த பாதை.. ரீவைண்ட்..!
    X

    தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: கடந்து வந்த பாதை.. ரீவைண்ட்..!

    • ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.
    • 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்.

    1977-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி பிறந்த உதயநிதி ஸ்டாலின், சென்னை லயோலாக் கல்லூரியில் பி.காம். படித்துள்ளார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், இன்பன், தன்மயா பிள்ளைகளும் உள்ளனர்.

    விஜய், திரிஷா நடித்த 'குருவி' திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி ஸ்டாலினை விநியோகஸ்தராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் 'விண்ணைத்தாண்டி வருவாயா.' இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக 'மதராசபட்டினம்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'மைனா', 'கோ', 'டான்', 'விக்ரம்' ஆகிய படங்களை வெளியிட்டார்.


    திரையில், 2009-ம் ஆண்டு வெளியான 'ஆதவன்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார். அப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல்', 'நண்பேண்டா', 'கெத்து', 'மனிதன்', 'சரவணன் இருக்க பயமேன்', 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'இப்படை வெல்லும்', 'நிமிர்', 'கண்ணே கலைமானே', 'சைக்கோ', 'கண்ணை நம்பாதே', 'ஏஞ்சல்','நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    திரைப்படங்களில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும், தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 2019-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதனை தொடர்ந்து, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

    திரைத்துறையிலும், அரசியலிலும் தீவிரமாக பணியாற்றி வந்த உதயநிதி ஸ்டாலின், 2023-ம் ஆண்டு வெளிவந்த 'மாமன்னன்' படத்துடன் தன்னுடைய திரையுலகை பயணத்தை முடித்துக் கொண்டு தீவிர அரசியலில் பணியாற்றி வருகிறார்.


    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். இந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசியலில் உச்சத்துக்கே சென்றார் உதயநிதி ஸ்டாலின்.

    இதனை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை தி.மு.க.வில் வலுக்க ஆரம்பித்தது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    முதலில் மறைமுகமாக தகவல்கள் வெளியான நிலையில், திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் கட்சி நிகழ்வுகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளார் என்று பொது வெளியிலும் பேச ஆரம்பித்தனர்.

    இந்நிலையில், அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த முதலமைச்சரின் பரிந்துரை கடிதம், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து அமைச்சரவை மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அதில் முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, 2009-ம் ஆண்டு தனது மகன் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்தார். அதே வழியில் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாடு துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×