search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பணிகளை அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் முடிக்க கெடு: கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை பொங்கல் பண்டிகைக்கு முன்பு திறக்க முடிவு
    X

    பணிகளை அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் முடிக்க கெடு: கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை பொங்கல் பண்டிகைக்கு முன்பு திறக்க முடிவு

    • தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு திட்டமிட்டப்படி புதிய பஸ்நிலையத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
    • அடுத்த மாதம் இறுதியில் கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு உள்ளது. ரூ.400 கோடி செலவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைகிறது.

    திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது தண்ணீர் செல்ல வழியில்லாமல் பஸ்நிலையம் முன்பு குளம்போல் தேங்கியது. இதைத்தொடர்ந்து மழைநீர் கால்வாய் புதிதாக அமைத்த பின்னர் பஸ்நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் இணைப்புச் சாலை மற்றும் வடிகால் அமைப்புகள் முடியாததால் தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு திட்டமிட்டப்படி புதிய பஸ்நிலையத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பஸ்நிலையம் அருகே மழைநீர் வடிகால்வாய் மற்றும் இணைப்பு சாலை பணிகளை அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் முடிக்க அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு கெடு விதித்து உள்ளனர். ஏற்கனவே பஸ்நிலையத்தில் 90 சதவீத பணிகள் முடிந்து உள்ளன. மீதி உள்ள பணிகள் மட்டுமே முடிக்கப்பட வேண்டும். இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    எனினும் கிளாம்பாக்கம் பஸ்நிலைய முகப்பில் ஜி.எஸ்.டி.சாலையில் குறுக்காக மழைநீர்கால்வாய் அமைக்கும் பணி 90 சதவீதம் மட்டுமே முடிந்து உள்ளன. இதேபோல் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து பின்புறம் உள்ள அய்யஞ்சேரி வழியாக பஸ் வெளியேறி ஊரப்பாக்கம் வழியாக வரும் பாதையும் குறுகலாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பஸ்நிலையம் முன்பு கால்வாய் அமைக்கும் பணி இன்னும் 10 சதவீதம் மட்டுமே முடிக்க வேண்டும். இது விரைவில் முடிக்கப்படும். அய்யஞ்சேரி இணைப்பு சாலை பணிகளும் 90 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள பணிகளை அடுத்த மாதம் (நவம்பர்)15-ந்தேதிக்குள் பணிகளை முடித்து ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இறுதிகட்ட பணிகளை கண்காணித்து வருகிறோம். அடுத்த மாதம் இறுதியில் கிளாம்பாக்கம் பஸ்நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகிவிடும். பொங்கல் பண்டிகைக்கு முன்பு திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றார். இதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையின் போது வெளியூர் செல்வோர் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×