search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சி-சார்ஜா விமானம் ரத்து- 184 பயணிகள் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு
    X

    திருச்சி-சார்ஜா விமானம் ரத்து- 184 பயணிகள் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு

    • தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
    • மாற்று விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

    இந்த விமானங்களை இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட், மலிந்தோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது. இதற்கிடையே திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு இன்று காலை 9.05 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    இந்த நிலையில் 184 பயணிகளுடன் அந்த விமானம் புறப்படுவதற்கு தயாரான போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து உடனடியாக இறக்கி விடப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

    ஆனால் அதனை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தினால் மாற்று விமானம் மூலம் அவர்கள் சார்ஜா அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 11.30 மணிக்கு துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை சார்ஜாவிற்கு அனுப்பும் வகையில் மாற்று விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விமானம் இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் புறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×