search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கோளாறால் 2 நோயாளிகள் அடுத்தடுத்து பலி? அதிகாரிகள் விசாரணை
    X

    கலாநிதி

    அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கோளாறால் 2 நோயாளிகள் அடுத்தடுத்து பலி? அதிகாரிகள் விசாரணை

    • பேரன் கார்த்திக் கவனித்தபோது கலாநிதிக்கு வரும் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து இருந்ததாக தெரிகிறது.
    • டாக்டர்கள், செவிலியர்களின் கவனக்குறைவால் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு செல்லும் ஆக்சிஜனில் ஏற்பட்ட கோளாறால் 2 நோயாளிகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலாநிதி (வயது64). இவர் காஞ்சிபுரம் அருகே அரசு புற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    சுவாசக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த வாரம் காச நோய் இருந்ததாக மருத்துவமனையில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கலாநிதி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த வாரம் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டடார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் பேரன் கார்த்திக் கவனித்தபோது கலாநிதிக்கு வரும் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து இருந்ததாக தெரிகிறது. இதுபற்றி அவர் அங்கிருந்த செவிலியரிடம் தெரிவித்தார். இதற்குள் கலாநிதி பரிதாபமாக இறந்தார்.

    ஆக்சிஜன் வரும் பகுதியில் ஏற்பட்ட கோளாறால் கலாநிதி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதேபோல் அங்கு சிகிச்சை பெற்று வந்த பூச்சிவாக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(70) என்ற நோயாளியும் ஆக்சிஜன் கோளாறால் இறந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கலாநிதியின் மகன் சீனிவாசன் கூறியதாவது:-

    என்னுடைய தாய் கலாநிதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நன்றாக பேசினார். மதியம் உணவு வாங்கி வர கூறினார். இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். மதியம் வரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் உணவு வாங்கி விட்டு வந்து பார்க்கும்போது ஆக்சிஜன் வருவதில் ஏற்பட்ட கோளாறால் இறந்து போனார். ஆக்சிஜன் அளவு குறைந்து வருவது குறித்து அங்கிருந்த ஆண் செவிலியர் ஒருவரிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தாயை இழந்து உள்ளோம். டாக்டர்கள், செவிலியர்களின் கவனக்குறைவால் அதிகமான நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். என்னுடைய தாய்க்கு ஏற்பட்ட நிலை இனி யாருக்கும் ஏற்படக்கூடாது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×