search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சினிமா பாணியில் சுவாரசியம்... விளக்குகளை அணைத்து கொள்ளை போன நகைகளை மீட்டுக்கொடுத்த கிராமத்தினர்
    X

    அண்டாவில் பொதுமக்கள் வைத்து சென்ற கவர்கள்.

    சினிமா பாணியில் சுவாரசியம்... விளக்குகளை அணைத்து கொள்ளை போன நகைகளை மீட்டுக்கொடுத்த கிராமத்தினர்

    • அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் தங்களது விசாரணை குறித்து ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர்.
    • கிராமத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின் விளக்குகள் மீண்டும் எரிய விடப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய பொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது50), பம்ப் ஆபரேட்டர். இவரது மனைவி பாண்டியம்மாள். 100 நாள் திட்டத்தில் வேலை பார்க்கிறார்.

    சம்பவத்தன்று பாண்டியம்மாள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 26 பவுன் நகைகள், ரூ.21,500 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் ராகவன் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா? என சோதனை நடத்தினர்.

    பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் குறிப்பிடும்படியாக தடயங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. கிராமத்திற்குள் பட்டப்பகலில் திருட்டு நடந்துள்ளதால் வெளியூரை சேர்ந்த நபர்கள் திருட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை எனவும், இது உள்ளூரில் இருப்பவர்களில் ஒருவரின் கைவரிசையாகத்தான் இருக்கும் என போலீசார் சந்தேகித்தனர்.

    அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் தங்களது விசாரணை குறித்து ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தனர். அப்போது கூடிப்பேசிய ஊர் பெரியவர்கள் நகை-பணத்தை திருடியவரை உள்ளூரில் வைத்து கைது செய்தால் கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என நினைத்தனர். இதையடுத்து நகை-பணத்தை மீட்டுத்தர வேறு வழிமுறையை கையாள முடிவு செய்தனர். இதுகுறித்து கிராமத்தினரிடமும் பேசினர்.

    அதன்படி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரு பேப்பர் கவரை கொடுத்தனர். இரவில் பள்ளிக்கூடத்தில் ஒரு பெரிய அண்டாவை வைத்து அனைத்து மின்விளக்குகளையும் அணைத்து விட்டு யாராவது திருடி இருந்தால் கவருக்குள் பொருளை வைத்து அண்டாவிற்குள் போட்டுவிட வேண்டும் என முடிவு செய்தனர்.

    இது தொடர்பான விவரங்களை தண்டோரா மூலம் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் அறிவித்தனர். இரவு 8 மணிக்கு பள்ளிக்கூட அறையில் 2 அண்டாக்கள் வைக்கப்பட்டது. பின்னர் கிராமத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மின் விளக்குகள் மீண்டும் எரிய விடப்பட்டது.

    ராகவன்-பாண்டியம்மாள்.

    பின்னர் அண்டாவில் இருந்த கவர்களை பிரித்துப் பார்த்தபோது ஒரு கவரில் நகைகள் இருந்தன. ஆனால் திருடப்பட்ட 26 பவுன் நகைகளில் 23 பவுன் நகை மட்டுமே இருந்தது. மேலும் பணத்தை வைக்கவில்லை. கவரில் இருந்தது திருடப்பட்ட ராகவனின் நகைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நகைகளை கிராம பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நகைகளை ராகவனிடம் ஒப்படைத்தனர்.

    தங்களது கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் காணாமல் போன நகைகளை மீட்க பழங்காலத்து நடைமுறைகளை கையாண்ட சுவாரசியமான இந்த சம்பவத்தை பார்த்த போலீசார் கிராம மக்களை பாராட்டினர்.

    இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:-

    பொதுவாக அந்த காலத்தில் இருந்தே இதுபோன்ற நடைமுறையை கையாண்டு வருவதாகவும், பழங்காலத்தில் பெரிய பொருட்கள் என்றால் வீடு வீடாக பைகளை கொடுத்தும், மோதிரம் போன்ற பொருட்கள் என்றால் சாணி உருண்டையைக் கொடுத்தும் ஒவ்வொரு வீடாக கொடுப்பது வழக்கம். திருடியவர்கள் அதை கொண்டு வந்து அண்டாவில் போட்டு விடுவார்கள். இப்போது அதே நடைமுறையை கையாண்டதில் நகைகள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பாக்கி உள்ள நகை-பணத்தை மீட்க மீண்டும் இதே வழிமுறையை கையாளப்போகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை காட்சிகளில் இதுபோன்ற வழிமுறைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் நேரடியாக ஒரு கிராமத்தில் இதுபோன்ற காட்சிகளில் நகை மீட்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×