என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பரந்தூரில் போராட்டத்தை தீவிரப்படுத்த கிராம மக்கள் நாளை ஒன்றுகூடி ஆலோசனை
- பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதி அளித்துள்ளது.
- வீடுகளை அப்புறப்படுத்த மாட்டோம், நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என்று எங்களிடம் கூறிவிட்டு அரசு எங்களை ஏமாற்றி விட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு உள்ளன.
இதனால் வீடுகள், விளைநிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 487-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடிக்கிறது.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில்துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்காக தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளது.
தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி ரூ.1,822.45 கோடி இழப்பீடு கணக்கிடப்பட்டு உள்ளது. நிலம் எடுப்பு பணிக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு துணை ஆட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்பட 326 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியை தொடங்க மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை அறிந்ததும் பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்த போராட்டக்காரர்கள் 12 பேர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.
அவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு வழங்கிய நிர்வாக அனுமதிக்கான நகலை அவர்களிடம் வருவாய் அலுவலர் வழங்கினார்.
இதையடுத்து நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழுவினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசை கண்டித்ததும், விவசாயிகளை வஞ்சிக்கக்கூடாது என்றும் கோஷம் எழுப்பினார்கள்.
தகவல் அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
12 பேர் கைது செய்யப்பட்ட தகவல் பரந்தூர் கிராமத்தில் பரவியது. இதையடுத்து பெண்கள் பரந்தூரில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு திரண்டு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 12 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பரந்தூர் கிராம மக்கள் கூறியதாவது:-
அரசு நிர்வாகம் எங்களிடம், உங்களை கைவிட மாட்டோம், உங்கள் குடியிருப்புகளை பாதுகாப்போம், நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கி இருப்பது ஏமாற்றம் தருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பரந்தூர் போராட்டக்குழு செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:-
வீடுகளை அப்புறப்படுத்த மாட்டோம், நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என்று எங்களிடம் கூறிவிட்டு அரசு எங்களை ஏமாற்றி விட்டது. எனவே கிராம மக்கள் நாளை (26-ந்தேதி) ஒன்று கூடி பேசி அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராவோம். என்னென்ன போராட்டங்களில் ஈடுபடலாம் என்று நாளை ஆலோசனை நடத்த உள்ளோம்.
ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் இனிவரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். தொடர்ந்து வெவ்வேறு போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து வருகிற திங்கட்கிழமை முதல் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரம் அடைய உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்