search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக கொடுத்தது ஏன்?: விளக்கம் அளித்த வங்கி ஊழியர்
    X

    ஆயி என்ற பூரணம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக கொடுத்தது ஏன்?: விளக்கம் அளித்த வங்கி ஊழியர்

    • மகளை வளர்க்க தன்னந்தனியாக கடுமையாக சிரமப்பட்டேன்.
    • பெண் வங்கி ஊழியர் நிலத்தை தானமாக வழங்கிய இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    மதுரை:

    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் போன்ற தரும காரியங்களை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பது கோடி புண்ணியங்களை செய்வதற்கான பலனை அளிக்கும் என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கி உள்ளார். அவரின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த பெருமைக்கு சொந்தக்காரர் மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம் (வயது52) ஆவார். இவர் தல்லாக்குளம் பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வங்கியில் பணியாற்றியபோது கடந்த 1991-ம் ஆண்டு இறந்தார்.

    இதையடுத்து ஆயி பூரணத்திற்கு அதே வங்கியில் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. கணவர் இறந்த நிலையில் மகள் ஜனனியை பாசத்தோடு வளர்த்து வந்த ஆயி அம்மாளுக்கு மீண்டும் பேரிடி காத்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகள் ஜனனி திடீரென இறந்தார். இது ஆயி பூரணத்தை பெருமளவில் பாதித்தது. தனது மகள் இருக்கும்போது மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என அடிக்கடி தாய் ஆயி பூரணத்திடம் கூறி வந்துள்ளார்.

    மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மதுரை மாவட்டம் கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தனக்கு சொந்தமான 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.

    வங்கி பெண் ஊழியரின் இந்த கொடை செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆயி பூரணம் கூறியதாவது:-

    எனது கணவர் இறந்தபோது மகள் ஜனனிக்கு 1½ வயது. மகளை வளர்க்க தன்னந்தனியாக கடுமையாக சிரமப்பட்டேன். சிறு வயது முதலே எனது மகள் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அடிக்கடி கூறி வந்தார். எனது தந்தைக்கும் அதே நோக்கம் இருந்தது.

    அவர் மூலம் பலர் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெற்று பயனடைந்துள்ளனர். எனது தந்தை வழியிலும், மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையிலும் திருமணத்தின்போது எனக்கு சீதனமாக வழங்கப்பட்ட நிலத்தை நான் படித்த பள்ளியான கொடிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு தானமாக வழங்கி உள்ளேன்.

    உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எனக்கு சொந்தமான இடத்தை கல்வித்துறை பேரில் பத்திரம் பதிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஒப்படைத்துள்ளேன். இம்முயற்சிக்கு எனது உறவினர்கள் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். யாரும் தடை போடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த ஆயி பூரணம் வெளி உலகம் அதிகம் அறியாதவர். தான் உண்டு, தன் குடும்பம் வேலை என வாழ்ந்து வருகிறார். இவரது கொடை செயலை அறிந்து மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராட்ட வங்கிக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். ஆனால் வந்தது எம்.பி. என்று கூட அறியாமல் ஆயி பூரணம்மாள் இருந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்தவர்கள் எடுத்து கூறிய பின்பு தான் தனக்கு வாழ்த்து கூற எம்.பி. வந்துள்ளார் என ஆயி பூரணம்மாளுக்கு தெரிய வந்துள்ளது. பெண் வங்கி ஊழியர் நிலத்தை தானமாக வழங்கிய இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அதற்கு முத்தாய்ப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆயி பூரணத்தை பாராட்டி உள்ளார்.

    மேலும் முதலமைச்சர் சிறப்பு விருது ஆயி அம்மாளுக்கு வருகிற குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×