search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னையில் மட்டும் அதிக மழை பெய்வது ஏன்?
    X

    சென்னையில் மட்டும் அதிக மழை பெய்வது ஏன்?

    • மழை உருவாகும் வானிலைச் சூழல்களையும், காற்று இயக்கங்களையும் பொறுத்து பொதுவாக 9 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
    • தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் கடற்கரைகளை கொண்டுள்ளன.

    மகிழ்ச்சியோடு கொண்டாடி வரவேற்க வேண்டிய மழையை, சென்னை மக்கள் மட்டும் அச்சத்துடன் எதிர்கொள்கின்றனர். ஏனென்றால் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் மழை கொட்டி தீர்க்கிறது. அதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் மழையை பற்றி முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    மழை என்பது ஒரு இயற்கை சுழற்சியால் நடக்கிறது. கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் இருந்து நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி வளிமண்டலத்தில் சேருகிறது. அங்கு குளிர்ந்து நீர்த்துளிகளாக மாறி மேகங்களை உருவாக்குகிறது. மேகங்கள் கனமாக மாறி மழையாக விழுகின்றன.

    மழை உருவாகும் வானிலைச் சூழல்களையும், காற்று இயக்கங்களையும் பொறுத்து பொதுவாக 9 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அதில் முதலாவது 'பருவ மழை'. அதாவது ஜூன் முதல் செப்டம்பர் வரை தெற்கு-மேற்கு பருவ மழையும் மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழையும் பெய்யும் காலங்களாகும். இந்தியாவில் இதுதான் முக்கிய மழைக்காலம் ஆகும். இந்த மழையை நம்பி தான் விவசாய பணிகள் எல்லாம் நடக்கின்றன.

    2-வது இடைமழை. அதாவது வெப்பமான இடங்களில் காற்று மேலே சென்று குளிர்ந்து நீர்த்துளிகளாக மாறும்போது உருவாகும் மழை. இது பொதுவாக வெப்ப மண்டலங்களில், கோடைகாலங்களில் மாலையில் நிகழும். 3-வது மலைமழை. அதாவது மலைகளின் அடிப்பகுதியில் உள்ள காற்று மேலே சென்று குளிர்வதால் மழையாக மாறும் மழை. இது மலையோரப் பகுதிகளில் அதிகமாக காணப்படும்.

    4-வது இடிமுழக்க மழை. மின்னல், இடியுடன் கூடிய, வலுவான மழையாகும். இது கடுமையான வானிலைச் செயல்பாடுகளால் உருவாகும், பொதுவாக வெப்பமான பகுதிகளில் அல்லது பருவநிலை மாற்றங்கள் அதிகமாக உள்ள இடங்களில் இது அடிக்கடி ஏற்படுகிறது. 5-வது, சுழல்புயல் மழை. இது புயலினால் ஏற்படும் மழை. சுழல்புயல் என்பது கடலில் உருவாகி, கடல் நீர் மேலே உயர்ந்து, காற்றழுத்தம் குறைவதால் உண்டாகும் ஒரு பெரிய நிகழ்வு. இதன் காரணமாக பலமுறை திடீர் மழை, பெரும் காற்று மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பொழியும்.

    6-வது, இடையிலான மழை. இது வெப்பமான காற்று மற்றும் குளிர் காற்று சந்திக்கும் பகுதியில் உருவாகும் மழை. இது மிதவெப்ப மண்டலங்களில் காணப்படும். 7-வது சிறுகாற்று மழை. இது மெல்லிய, சிறிய நீர்த்துளிகள் மெதுவாக மழையாக விழும் ஒரு மழை வகையாகும். இந்த மழையில் நீர்த்துளிகள் பரவலாக கிடைக்கின்றன, ஆனால் அவை மிகச் சிறியதாகவும், மெதுவாகவும் இருக்கும். இது பொதுவாக வெப்பநிலை குறைவாக இருக்கும் நாட்களில் அல்லது மிதமான குளிர்ந்த காற்று மண்டலங்களின் மூலம் கிடைக்கும்.

    8-வது நிச்சயமில்லாத மழை. இது பருவம் இல்லாத நேரங்களில் திடீரென்று பெய்யும் மழை. ஒன்பதாவது திடீர் மழை. இது மிக குறுகிய நேரத்தில் அதிகமான நீர் விழும் மழை, இது பேரழிவுகளை உருவாக்கும்.

    இந்த மழை வகைகளில் மிகவும் பேராபத்தானது சுழல்புயல் மழை மற்றும் திடீர் மழை தான். அதில் சென்னையில் இதற்கு முன்பும், இப்போதும் பெய்வது சுழல்புயல் மழை தான். இது கடலில் ஏற்படும் புயலால் அதிகளவு மழை பொழிவு இருக்கிறது. திடீர் மழை என்பது வயநாட்டில் பாதிப்பினை ஏற்படுத்திய மழை தான்.

    சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொரு முறையும் வங்கக்கடலில் ஏற்படும் சுழல் புயல் மழையால் பாதிக்கப்படுகின்றன.

    தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் கடற்கரைகளை கொண்டுள்ளன. அதில் சென்னை உள்பட 13 மாவட்டங்கள் வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள் ஆகும். கன்னியாகுமரி மட்டும் வங்கக்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடலோரங்களை உள்ளடக்கி உள்ளது.

    வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவாகி, இயற்கையாகவே சென்னை மற்றும் ஆந்திரா, ஒடிசா ஆகிய பகுதிகளில் தான் கரையை கடக்கிறது. இதுதான் சென்னையில் அதிக மழை பொழிவுக்கு முக்கிய காரணம்.

    கடந்த காலங்களில் வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் தான் கரையை கடந்து வந்தன. ஆனால் பருவ நிலை மாற்றத்தால் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையிலும் கரையை கடக்கிறது. அதனால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. பொதுவாக புயல் கரையை கடக்கும்போது அந்த நகரங்களில் 10 முதல் 30 செ.மீட்டர் கூட மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்பு மற்ற மாவட்டங்களிலும் எதிரொலிக்கிறது. அதேவேளையில் பிற மாவட்டங்களில் இதே மழை பெய்தாலும், அவை கவனம் ஈர்க்கப்படுவதில்லை.

    Next Story
    ×