search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கட்சி பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்
    X

    கட்சி பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்

    • தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டது அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள தளவாய் சுந்தரம் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், கட்சியின் மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்தார். கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதற்கான உத்தரவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிறப்பித்தார். அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தளவாய் சுந்தரம் தற்காலிகமாக நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த தகவல் கட்சியின் தலைமைக்கு சென்றுள்ளது.

    அது மட்டுமின்றி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியிலும் தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் வருகையின் போதும் அவரை சந்தித்து பேசி இருக்கிறார். இவையே அவர் நீக்கப்பட்டற்கான காரணமாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக குமரி கிழக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இரு கோஷ்டியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சி தலைமைக்கு புகார் சென்றிருக்கிறது. இந்தநிலையில் தான் அவர் வகித்த கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

    தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டது அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கூறுகையில், "எது நடந்தாலும் ஓகே. ரைட் என சொல்ல வேண்டியத தான். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால் அ.தி.மு.க.வின் பலம் குறையும் என்று நினைத்திருக்கலாம் நடப்பதை ஏற்றுக்கொள்வோம்" என்றார்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாத நிலையில் புதிய மாவட்ட செயலாளராக யாரை தேர்ந்தெடுப்பது? என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது சேலத்தில் உள்ளார்.

    இதையடுத்து அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பச்சை மால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் சிலர் சேலத்தில் முகாமிட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக புதிதாக யாரும் நியமிக்கப்படுவார்களா? அல்லது பொறுப்பாளர் நியமிக்கப்படுவாரா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×