search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண் துண்டு துண்டாக வெட்டி படுகொலை- போலீசார் விசாரணை
    X

    பெண் துண்டு துண்டாக வெட்டி படுகொலை- போலீசார் விசாரணை

    • கொலையுண்ட பெண் மணலி பகுதியைச் சேர்ந்த தீபா என்பது தெரிய வந்தது.
    • சூட்கேசில் அடைத்து பெண்ணின் உடல் வீசப்பட்ட இடம் குடியிருப்பு பகுதியாகும்.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக உடலை வெட்டி சூட்கேசில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    துரைப்பாக்கம் குமரன் குடி பகுதியில் இன்று காலை 7.30 மணி அளவில் மர்மமான முறையில் சாலையோரமாக சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அந்த சூட்கேசில் ரத்தக்கறை படிந்திருந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

    இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரபு போலீஸ் படையுடன் விரைந்து சென்று சூட்கேஷை கைப்பற்றினார்.

    தென் சென்னை இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி, அடை யாறு துணை கமிஷனர் பொன்.கார்த்திக், உதவி கமிஷனர் பரத் ஆகியோரும் நேரில் சென்று விசாரணையை முடுக்கிவிட்ட னர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சூட்கேசில் இருந்த கைரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    பின்னர் போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தது. 5-க்கும் மேற்பட்ட உடல் பாகங்களை சூட்கேசில் இருந்து போலீசார் மீட்டனர். பின்னர் அவைகளை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட பெண் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கொலையுண்ட பெண் மணலி பகுதியைச் சேர்ந்த தீபா என்பது தெரிய வந்தது. 30 வயதான அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றிய எந்த விவரங்களும் முழுமையாக தெரியவில்லை.

    அது தொடர்பான விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தீபா நேற்று இரவு மணலியில் இருந்து தனக்கு தெரிந்த நண்பர்கள் சிலருடன் துரைப்பாக்கம் பகுதிக்கு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

    அவர்கள்தான் தீபாவை கொலை செய்து உடலை துண்டித்து சூட்கேசில் அடைத்து வீசி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதற்கிடையே தீபா பாலியல் அழகியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர் தனக்கு நன்கு அறிமுகமான நபர்களுடன் துரைப்பாக்கம் பகுதிக்கு சென்று யாருடைய வீட்டிலாவது தங்கி இருக்கலாம் என்றும், அப்போது அங்கு வைத்து ஏற்பட்ட தகராறிலேயே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ம் சந்தேகிக்கப்படுகிறது.

    தீபாவை துரைப்பாக்கத்துக்கு மணிகண்டன் என்பவரே அழைத்துச் சென்றிருப்பதாகவும் இவர் பாலியல் தரகர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் கொலையாளிகளை பிடிக்கவும் வலை விரிக்கப்பட்டு உள்ளது.

    சூட்கேசில் அடைத்து பெண்ணின் உடல் வீசப்பட்ட இடம் குடியிருப்பு பகுதியாகும். இன்று காலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு சூட்கேசில் இருந்து பெண்ணின் உடலை மீட்டபோது அதனை வேடிக்கை பார்க்க அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கொலையுண்ட தீபா பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்தும் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். இதன் மூலம் கொலையாளிகளை இன்றைக்குள் பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×