search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியில் இருந்து தனது பங்காக ரூ.90 ஆயிரம் அனுப்பிய தமிழர்
    X

    சின்னராஜா செல்லதுரை

    தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியில் இருந்து தனது பங்காக ரூ.90 ஆயிரம் அனுப்பிய தமிழர்

    • கடந்த 6 மாதங்களாக ரூ.90 ஆயிரத்து 558-ஐ சேமித்து வைத்தேன். தற்போது அந்த தொகையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்புகிறேன்.
    • தமிழக அரசின் கடனை செலுத்துவதற்கு எனது பங்களிப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும்

    சென்னை:

    திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டி கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர் சவுதி அரேபியா ஜிந்தாவில் வசிக்கிறார். அங்கு அவர் என்ஜினீயராக பணியாற்றுகிறார்.

    அவர் அங்கிருந்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் தற்போது சவுதி அரேபியாவில் என்ஜினீயராக பணிபுரிகிறேன். பொருளாதாரமும் படித்து வருகிறேன். 2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் செய்தி மூலம் அறிந்தேன்.

    அடுத்த ஆண்டு (2023) மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 348.73 கோடியாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும்.

    இதன்படி கணக்கிட்டால், ஒவ்வொரு தமிழன் மீதும் உள்ள தமிழக அரசின் கடன் ரூ.90 ஆயிரத்து 558 ஆக உள்ளது. இதை அறிந்து நான் அதிக வருத்தம் அடைந்தேன். எனவே தமிழக அரசின் கடனை அடைக்கும் வகையில் எனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    அதனால், கடந்த 6 மாதங்களாக ரூ.90 ஆயிரத்து 558-ஐ சேமித்து வைத்தேன். தற்போது அந்த தொகையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்புகிறேன். தமிழக அரசின் கடனை செலுத்துவதற்கு எனது பங்களிப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு ஒரு குடும்பம். இக்குடும்பத்தில் பிறந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தொகையை பெற்றுக்கொண்ட தமிழக அரசு அதற்கான ரசீதை அனுப்பி வைத்துள்ளது. இதுதொடர்பாக சின்னராஜா செல்லதுரைக்கு தமிழக நிதித்துறை இணைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நீங்கள் அனுப்பி வைத்த மதிப்பு மிக்க உங்கள் பங்களிப்புக்காக நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுபற்றி சின்னராஜா செல்லதுரையிடம் கேட்டபோது, எனது இந்த செயல்பாட்டினால் தூண்டப்படும் ஒவ்வொருவரும் அவர்களின் பங்களிப்பை அரசுக்கு அளித்தால் தமிழக அரசுக்கு இருக்கும் கடன் நெருக்கடி குறையும் என்று கூறினார்.

    Next Story
    ×