என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
2026 தேர்தல்: தி.மு.க.விடம் 25 இடங்கள் கேட்க விசிக முடிவு
- தி.மு.க. 3 மாதத்துக்கு முன்பே தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி உள்ளது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இப்போது 144 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர்.
சென்னை:
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன.
அதிலும் குறிப்பாக தி.மு.க. 3 மாதத்துக்கு முன்பே தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி உள்ளது. அதில் இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு அணிகளின் மாநில நிர்வாகிகளை அழைத்து தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதன் அடிப்படையில் கட்சி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி 234 தொகுதிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பார்வையாளர்களை நியமித்து உள்ளார். அவர்கள் தொகுதியில் நடக்கும் பணிகளை சரிபார்த்து கட்சி மேலிடத்துக்கு தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதே பாணியில் கட்சியை அடி மட்ட அளவில் பலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இப்போது 144 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் இன்னும் 90 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் செயல் வீரர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க ஆலோசனை மேற் கொண்டு வருகிறார்கள்.
தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக 3-வது மிகப்பெரிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை உருவாக்கி விட வேண்டும் என்ற அடிப்படையில் திருமாவளவன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கட்சியில் புதிதாக இளைஞர்களையும் மகளிரையும் சேர்த்து வருகிறார்.
அந்த வகையில் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் மதுபோதை ஒழிப்பு மகளிர் மாநாட்டை நடத்தினார். இந்த மாநாடு ஒரு வெற்றி மாநாடாக அமைந்தது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற திருமாவளவனின் கால் நூற்றாண்டு கால கோரிக்கை முழக்கம் இப்போது அரசியலில் பேசும் பொருளாகி விட்டது.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிப்பதால் 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் திருமாவளவன் பங்கு கேட்பாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்தது.
இந்த நிலையில் த.வெ.க. தலைவரான நடிகர் விஜய் எங்களுடன் கூட்டணி சேருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் இடம் உண்டு என்று வெளிப்படையாக அறிவித்தார். இது அரசியலில் மேலும் பரபரப்பை உருவாக்கியது.
இதற்கு, திருமாவளவன் விளக்கம் அளிக்கையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு என்றார். அதாவது நாமும் சேர்ந்து உருவாக்கியது தான் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி. அதனை தக்க வைப்பதும், பாதுகாப்பதும் நமக்குமான கடமைகளாகும். அதனை சிதறடிப்பதற்கோ, சிதைப்பதற்கோ நாம் எவ்வாறு இடம் அளிக்க இயலும் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் வருகிற 2026 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட பலர் கட்சித் தலைமையில் இப்போதே விருப்பம் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்று ஆதவ் ஆர்ஜூன் டீம் ஒரு சர்வே எடுத்து வருகிறது.
ஏனென்றால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் கிடைத்த வாக்குகளை வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 சதவீதம் ஓட்டு என சொல்வதால் அதை மறுக்கும் வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வி.சி.க. ஓட்டு எவ்வளவு தி.மு.க.வுக்கு சென்றிருக்கும் என்பதை அறிய இந்த சர்வே மேற்கொள்ளப்படுவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக கூறும் வி.சி.க.வினர் அது எத்தனை சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க இந்த கள ஆய்வு பயன்படும் என்று கூறுகின்றனர். இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி கூறியதாவது:-
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக வி.சி.க. உள்ளது. எங்கள் கட்சியின் வாக்கு வங்கி ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமாக உள்ளது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாகி கொண்டு வருகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நாங்கள் 15 தொகுதிகளை கேட்டோம். நாகை, திருப்போரூர், வானூர், காட்டுமன்னார்கோவில், செய்யூர், அரக்கோணம் ஆகிய 6 தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் வானூர், அரக்கோணம் தவிர மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
இந்த முறை வி.சி.க.வில் போட்டியிட நிறைய பேர் உள்ளதால் கட்சித் தலைவர் எப்படியும் 25 தொகுதிகளை கூட்டணியில் கேட்பார் என்று எதிர்பார்க்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் இருப்பதால் எங்கள் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்