search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தஞ்சையில் தலைமறைவான முக்கிய குற்றவாளி - உறவினர் வீடுகளில் அதிரடி சோதனை: ஆவணங்கள் சிக்கின
    X

    தஞ்சையில் தலைமறைவான முக்கிய குற்றவாளி - உறவினர் வீடுகளில் அதிரடி சோதனை: ஆவணங்கள் சிக்கின

    • கஞ்சாவை வாங்கி, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.
    • லாரிக்கு பாதுகாப்பாக ஒரு சொகுசு காரும் வந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து லாரி மூலம் கஞ்சா கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த 22-ந்தேதி தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேராவூரணி அருகே முடச்சிக்காட்டில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கிருந்த பாலத்தில் லாரியில் இருந்து, பெரிய பெரிய பொட்டலங்களை 3 பேர் காரில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, கார் மற்றும் லாரியை சோதனை செய்ததில், சுமார் 330 கிலோ அளவிலான கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் லாரி டிரைவரான தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதுார் ஊத்துமலையை சேர்ந்த பெரமராஜ் (வயது 34), பேராவூரணி அருகே காரங்குடாவை சேர்ந்த அண்ணாதுரை (44), அம்மணிசத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (60) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்து கைது செய்தனர்.

    இதில் தஞ்சாவூர் விளார் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பையா (52) என்பவர், ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் அருகே அனகப்பள்ளியில் கஞ்சாவை வாங்கி, கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும், இதற்கு தனது நண்பர் ஒருவருக்கு சொந்தமான படகை ஏற்பாடு செய்திருந்ததும் தெரியவந்தது.

    ஆந்திராவில் இருந்து லாரி டிரைவர் பெரமராஜ் மூலம் டூல்ஸ் பாக்ஸ் என்பது போல ஒரு பெட்டியை உருவாக்கி, அதை லாரியின் அடியில் பொருத்தி அதில் கஞ்சாவை பதுக்கி தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆந்திராவில் இருந்து தமிழக எல்லைக்கு வருவதற்காக லாரிக்கு கர்நாடக பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தி உள்ளனர். பிறகு, தமிழக எல்லையில் இருந்து சென்னை, விழுப்புரம் வரை சென்னை பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டை பயன்படுத்தி உள்ளனர். லாரிக்கு பாதுகாப்பாக ஒரு சொகுசு காரும் வந்துள்ளது.

    பின்னர், திருச்சி, தஞ்சாவூர் பகுதிக்கு வரும் போது, லாரியின் உண்மையான பதிவெண் நம்பர் பிளேட்டை பயன்படுத்தி, பேராவூரணியில் வந்து கஞ்சாவை காரில் மாற்றி உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து 330 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், அண்ணாதுரைக்கு சொந்தமான 3 படகுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கருப்பையா தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு ஏ.எஸ்.பி. ஷனாஸ் இலியாஸ், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி உள்ளிட்டோர் கஞ்சா கடத்தல் கும்பலிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

    இதையடுத்து தஞ்சை விளார் சாலையில் உள்ள கருப்பையா வீடு மற்றும் தஞ்சை புதுப்பட்டினம் பகுதியில் உள்ள அவரது உறவினர் ஒருவர் ஆகியோர் வீடுகளில் பேராவூரணி இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் ரூ.37.50 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. தொடர்ந்து, இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என விசாரித்தனர். இதையடுத்து ரூ.37.50 லட்சம் பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    மேலும், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கருப்பையாவை தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் மேலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சையில் நடந்த இந்த அதிரடி சோதனை சம்பவம் டெல்டா பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×