search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு- தீபாவளி பாதுகாப்புக்கு 48 ஆயிரம் போலீசார்
    X

    தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு- தீபாவளி பாதுகாப்புக்கு 48 ஆயிரம் போலீசார்

    • மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்தை தடை செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • சென்னை தி.நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் ஆகியவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் கடை வீதிகளில் அலை மோதுகிறார்கள்.

    இதன் காரணமாக சென்னை உட்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் திரள்கிறார்கள்.

    இதனால் ஜவுளிக் கடைகள், பட்டாசு கடைகள், இனிப்பு மற்றும் பலகார கடைகள் இருக்கும் பகுதிகளில் திருவிழா கூட்டம் போல மக்கள் கூடி வருகிறார்கள்.

    சென்னையில் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாகவே மக்கள் அதிக அளவில் கூடி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகிறார்கள்.


    தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமையான நாளை சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, உள்பட தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதன்படி மாநில முழுவதும் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் முக்கிய கடைவீதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக போலீசார் சாதாரண உடையில் கண்காணித்து வருகிறார்கள். தீபாவளி பொருட்களை வாங்க வரும் மக்கள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்தை தடை செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    சென்னை தி.நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


    3 இடங்களில் காவல் உதவி மையமும் ஒரு தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 75 கேமராக்கள் நிறுவப்பட்டு அதன் மூலமாக கூட்டத்தை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    2 டிரோன் கேமராக்களை பறக்கவிட்டு போலீசார் கண்காணிக்கிறார்கள். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக தொலைபேசி எண்கள் அடங்கிய வளையம் குழந்தைகளின் கைகளில் அணிவிக்கப்பட்டு வருகிறது.

    கூட்ட நெரிசலில் பிக்பாக்கெட் மற்றும் வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிப்பதற்காக அவர்களை அடையாளம் காட்டிக் கொடுக்கும் 64 கேமராக்களும் தனியாக நிறுவப்பட்டு உள்ளன.

    இந்த கேமராக்கள் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை உடனடியாக காட்டிக் கொடுத்து விடும். அதே நேரத்தில் சாதாரண முறையில் 15 காவலர்கள் அடங்கிய 5 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களும் கூட்ட நெரிசலில் மக்களோடு மக்களாக கண்காணித்து வருகிறார்கள். தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை ஆகிய இடங்களில் மொத்தமாக 17 கண்காணிப்பு கோபுரங்களை போலீசார் அமைத்து உள்ளனர்.

    அங்கிருந்தபடியே சுழற்சி முறையில் போலீசார் பைனாகுலர் மூலமாக கண்காணித்து சந்தேக நபர்களின் நடமாட்டம் தெரிந்தால் உஷார் படுத்துகிறார்கள். 19 இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலமாக பொதுமக்கள் உஷாராக இருக்கும்படியும் போலீசார் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறார்கள். 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    கூட்ட நெரிசலில் யாராவது மயங்கி விழுந்தால் அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் செல்ல முறையான இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு உள்ளது.

    தீபாவளிக்கு இன்னும் புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகளை வாங்காதவர்கள் விடுமுறை நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து இடங்களிலும் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் போலீசார் தேவையான கூடுதல் பாது காப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

    குறிப்பாக தி.நகர் ரங்கநாதன் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். அது போன்ற இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் கூடுதல் கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தீபாவளியை மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    Next Story
    ×