search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்து அமைப்பினர் போராட்டம்: கோவையில் எச்.ராஜா உள்பட 500 பேர் கைது
    X

    இந்து அமைப்பினர் போராட்டம்: கோவையில் எச்.ராஜா உள்பட 500 பேர் கைது

    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • புதிதாக இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

    கோவை:

    வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.வினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கோவையிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை டாடாபாத் பகுதியில் பா.ஜ.க வங்கதேச இந்துக்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா கலந்து கொண்டார். போராட்டத்தில் கோவை மாநகர் மாவட்டத்தை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி, வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். அனுமதியை மீறி இன்று போராட்டம் நடந்தது. போராட்டத்தையொட்டி அங்கு காட்டூர் துணை கமிஷனர் கணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்பட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்களை அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    முன்னதாக பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசினாவின் ஆட்சி எதிர்க்கட்சிகள் மற்றும் ராணுவத்தின் சதியால் அகற்றப்பட்டுள்ளது. அங்கு புதிதாக இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

    சிறுபான்மை மக்களான இந்துக்கள் அதிகளவில் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் உடைமைகள், பொருட்கள், கோவில்கள் என அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் இஸ்கான் நிர்வாகி ஒருவரை கைது செய்தனர். அவரை ஜாமினில் எடுக்க முயன்ற வக்கீல் கொல்லப்பட்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    அண்டை நாடான வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்களை ராகுல் காந்தியோ, மம்தா பானர்ஜியோ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ கண்டு கொள்ளவில்லை. நாங்கள் வங்காள தேச இந்துக்களின் பாதுகாப்புக்காக போராட அனுமதி கேட்டோம். அதற்கும் தமிழக அரசு அனுமதி மறுத்துவிட்டனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசு அகற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதேபோல் பொள்ளாச்சியில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் குண்டுக்கட்டாக ஏற்றி கைது செய்தனர்.

    30 பெண்கள் உள்பட மொத்தம் 155 பேர் கைதானார்கள்.

    Next Story
    ×