search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் அன்று சிஏ தேர்வுகள்.. எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் சொன்ன பதில்
    X

    பொங்கல் அன்று சிஏ தேர்வுகள்.. எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் சொன்ன பதில்

    • பொங்கல் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • தீபாவளி அன்று தேர்வு நடத்துவீர்களா? என ராஜீவ் காந்தி கேள்வி

    ஜனவரி 14-ல் Business laws மற்றும் ஜனவரி 16-ல் Quantitative Apitude தேர்வு நடைபெறுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சி ஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக மாணவரணித் தலைவர் ராஜீவ்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழர் விரோத ஒன்றிய பாஜக அரசு. தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகளை நடத்துகிறத ஒன்றிய அரசு. தீபாவளி அன்று தேர்வு நடத்துவீர்களா?" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த எக்ஸ் பதிவை தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.

    அவரது பதிவில், "பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தி என்றும் வடக்கில் லோஹ்ரி, உ.பி.யில் கிச்சடி, குஜராத் & ராஜஸ்தானில் உத்தராயணி, மற்றும் அரியானா பஞ்சாபில் மாகி என்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிஹு என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.

    ஆகவே பொங்கல் என்பது தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகையாகும். உங்கள் வேடிக்கையான கோட்பாட்டின்படி பாஜக அனைத்து மாநிலங்களுக்கும் எதிரானதா?

    சி ஏ தேர்வுகளுக்கான தேதிகள் ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்பான இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. நிதி அமைச்சகத்தால் அல்ல.

    தொழில்முறை பாடத் தேர்வுகளுக்கு ஏன் இத்தகைய விடுமுறைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது தொழில் வல்லுநர்களுக்கு மட்டுமே தெரியும். எடுத்துக்காட்டாக, நான் ஒரு பயிற்சி நிறுவன செயலாளராக இருக்கிறேன். எனது கல்லூரி நாட்களில் எனது அனைத்து சி.எஸ். தேர்வுகளும் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு விடுமுறை வரை நடந்தன. இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா புத்தாண்டு & கிறிஸ்துமஸுக்கு எதிரானது என்று அர்த்தமா?" என்று பதிவிட்டுள்ளார்.

    தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் இந்த எக்ஸ் பதிவை பகிர்ந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா அவர்களே. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் "தமிழ் விரோதி" ப்ரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×